புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியது தொடர்பாக நோட்டீஸ் வழங்க டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்மாநில அமைச்சர் அதிஷி வீட்டுக்குச் சென்றனர். மதுரா சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு போலீஸ் குழு சென்ற போது அவர் வீட்டில் இல்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதே குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகக் கோரி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை நேரில் சென்று நோட்டீஸ் வழங்கிய அடுத்த நாள் அமைச்சர் வீட்டுக்கும் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் அவருக்கு (கேஜ்ரிவாலுக்கு) நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கலாம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே முதல்வர் கேஜ்ரிவாலுக்கு வழங்கிய நோட்டீஸில், அணி மாறுவதற்காக பாஜகவால் அணுகப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் பெயர்களை வெளியிடுமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தக் குற்றப்பிரிவு போலீஸாருக்காக நான் அனுதாபப்படுகிறேன். இதில் அவர்களின் தவறு என்ன இருக்கிறது. டெல்லியில் குற்றங்களைத் தடுப்பதே அவர்களின் வேலை. ஆனால் குற்றங்களைத் தடுப்பதற்கு பதிலாக அவர்கள் இதுபோன்ற நாடகத்தை நடத்துகிறார்கள். அதனால் தான் டெல்லியில் குற்றங்கள் அதிகரித்து விட்டன.
ஆம் ஆத்மியின் எந்தெந்த எம்எல்ஏக்களை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர்களின் அரசியல் எஜமானர்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் என்னை விட நீங்கள் அதை நன்றாக அறிவீர்கள். உங்களுக்கு எல்லாமே தெரியும். டெல்லியில் மட்டும் இல்லாமல், நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக எந்தக் கட்சியில் இருந்து எந்தெந்த எம்எல்ஏகள் மூலமாக எந்தெந்த அரசுகள் கவிழ்க்கப்பட்டது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். பிறகெதற்கு இந்த நாடகம்?” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பாஜக கூறியதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். டெல்லி அமைச்சர் அதிஷியும் இதே குற்றச்சாட்டினை வைத்தார். அவர் “பாஜக தனது தாமரை 2.0 ஆபரேஷனைத் தொடங்கி, ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க சதி செய்கின்றது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான பாஜக குழு ஜன.30-ம் தேதி டெல்லி காவல் துறை தலைவரைச் சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டது.