மதுரை: மக்களவைத் தேர்தல் நெருங்கும்நிலையில், தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காத நிலையில் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்று திமுகவும், அதிமுகவும் போஸ்டர் ஒட்டி கலாய்த்து கொண்டு, தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த மக்கவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. அக்கட்சிகளின் 39 எம்பிக்களின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகளையும், அவர்கள் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு மட்டுமில்லாது, பொதுமக்கள் அதிகம் உள்ள முக்கிய இடங்களில், சாலைகளில், தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி புதிய தேர்தல் வியூகத்தை கையில் எடுத்தனர்.
அந்த போஸ்டரில் அதிமுக என்று போடாததால் முதல் நாள், அந்த போஸ்டரை யார் ஒட்டினார்கள் என்பது தெரியாமல் பொதுமக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் குழப்பமடைந்தனர். அடுத்தடுத்த நாளில் மீண்டும் அதே தலைப்பில் போஸ்டர் ஓட்டி சில வாசகங்களை குறிப்பிட்டிருந்தனர். அதில், ”ஸ்டாலின் படத்தைப்போட்டு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து போட்டோ ஷூட் தவிர வேறெங்குமே தென்படாத விடியா திமுக குடும்பத்தை கண்டா வரச் சொல்லுங்க என்றும் ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டை மூழ்கடித்தவர்களை கண்டா வரச் சொல்லுங்க, தமிழக எம்பிகள் 39 பேரை கண்டா வரச் சொல்லுங்க,” என குறிப்பிட்டு திமுகவை கலாய்த்து இருந்தனர்.
அதன்பிறகு அதன்பின்னணியில் அதிமுக ஐடி விங் பிரிவுதான் இந்த போஸ்டர் பிரச்சாரம் செய்தது என்பது தெரிய வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது திமுக கட்சி, அதே அதிமுகவின் அதே ‘கண்டா வரச்சொல்லுங்க’ ஐடியாவை கையில் எடுத்து போஸ்டர் ஓட்டி, அதில், கண்டா வரச்சால்லுங்க என தலைப்பிட்டு “நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவின் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை” என்று கூறி அதில், “பாஜகவை எதிர்ப்பது போல் நடிக்க தெரிந்த கட்சிகளுக்கு முன்னுரிமை, கட்சியில் பத்து பேரோ, ஒரே ஒருத்தரோ இருந்தால் கூட போதும், குறிப்பாக சுயமரியாதை, சூடு, சொரணை இருக்கவே கூடாது, முக்கியமாக நாங்கதான் உண்மையான அதிமுக என்பதை நம்ப வேண்டும்”, என கூறி அதிமுக தலைமை அலுவலக முகவரியையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை, தற்போது திமுகவும் பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையிலே, திமுக, அதிமுக கட்சிகளின் தலைமைகள், தங்கள் கூட்டணிகளுடன் ‘சீட்’ பேச்சுவார்த்தை நடத்தி வரும்நிலையில், இரு கட்சி நிர்வாகிகள் இதுபோல் சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையாக மாறமாறி கலாய்த்து கொண்டிருப்பது, தமிழக தேர்தல் களத்தை தற்போதே பரபரப்பாக்கியுள்ளது.