'சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' – பாரா தடகள வீராங்கனையிடம் வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்

புதுடெல்லி,

இந்திய பாரா தடகள வீராங்கனை சுவர்ணா ராஜ் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னைக்கு சென்றார். இதற்கிடையே விமானம் தரையிறங்கிய நிலையில், விமான வாயிலில் அவர் வெளியேறும்போது அவருக்கு சொந்தமான சக்கர நாற்காலி அவரிடம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் அந்த சக்கர நாற்காலி சேதம் அடைந்த நிலையில் அவரிடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வேதனை தெரிவித்த சுவர்ணா ராஜ், விமான நிறுவனத்திடம் புகார் அளித்தார். ரூ.3 லட்சம் மதிப்புள்ள தனது சக்கர நாற்காலி சேதம் அடைந்ததற்கு விமான நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் அந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விமான நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், ‘இந்த பிரச்சினையை விரைந்து தீர்ப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். சுவர்ணா ராஜிடம் பேசி வருகிறோம். வாடிக்கையாளர் அனுபவத்தில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம். அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் கூறப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.