இலங்கை – தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு பொருளாதார ஒற்றுமையின் மைல்கல்லாகும் – ஜனாதிபதி.
• தாய் சர்வதேச விமான சேவை மார்ச் மாதம் முதல் கொழும்பு – பெங்கொக் இடையில் நாளாந்தம் ஆரம்பிக்கப்படும்.
• இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு இரு நாடுகளினதும் உறவுகளை புதிய பாதையில் கொண்டுச் செல்ல உதவும்.
• வலயத்தின் பலதரப்பு கலந்துரையாடல்களுக்கு அமைவான இலக்குகளை அடைய இலங்கையுடன் இணைந்து செயற்படுவோம் – தாய்லாந்து பிரதமர்.
சுபீட்சமான இலங்கைக்காக உலக நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயலாற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள், ஆசியான் வலய நாடுகள் வசமாக காணப்படும் எதிர்காலத்துக்கான முன்னோடி பொருளாதார வலுவைக் கொண்டிருக்கும் தரப்புகளுடன் இருதரப்பு வர்த்தகத்தை பலப்படுத்திகொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடனான இருதரப்பு சந்திப்பின் பின்னர் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இரு தலைவர்களினதும் பங்கேற்புடன் இடம்பெற்ற இணை ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் தெரிவித்தார்.
இணை ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், தாய்லாந்து பிரதமர், ஜனாதிபதி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்திலும் எண்ணங்களைப் பதிவிட்டார்.
இணை ஊடகவியலாளர் மாநாட்டில், தாய்லாந்து பிரதமர் ஷரேதா தவீசின் இலங்கை ஜனாதிபதியுடனான இருதரப்பு கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் இடையில் மட்டுமன்றி, BIMSTEC, இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டமைப்பான IORA மற்றும் ASEAN உள்ளிட்ட பிராந்திய அமைப்புக்களின் இலக்குகளை அடையவும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
2025 – 2027 வரையிலான மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமைக்கான ஆசியான் பிராந்திய அமைப்பின் பிரதித்துவமாக தாய்லாந்து செயற்படுகிறது என்றும் தாய்லாந்து பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த மாநாட்டின் உறவுகளை மேம்படுத்துவதில் தாய்லாந்து மத்தியஸ்த அந்தஸ்த்தை கொண்டுள்ளதென தெரிவித்த தாய்லாந்து பிரதமர்,
தாய்லாந்தும் இலங்கையும் இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இணைந்து செயல்பட முடியும் என்றும் தாய்லாந்து பிரதமர் வலியுறுத்தினார்.
இங்கு ஜனாதிபதி ரணில் ஆற்றிய முழு உரை,
“தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவீசின், பிரதி பிரதமர், வர்த்தக அமைச்சர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு எனது அழைப்பை ஏற்று வருகை தந்த பிரதமர் தவீசினுக்கு நன்றிகள்.
அத்துடன், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதே தாய்லாந்து பிரதமரின் விஜயத்தின் முதன்மை நோக்கமாகும். இதுவரை நமது இரு நாடுகளும் கவனம் செலுத்தாத விடயங்களின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA) இலங்கை ஆசியான் நாடொன்றுடன் கைசாத்திடும் இரண்டாவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இரு நாட்டு அரசுகளும் அர்ப்பணிப்புடனும் திறம்படவும் செயல்பட்டன. இரு நாடுகளினதும் பொருளாதார ஒத்துழைப்பின் மைல்கல்லாகவும் இதனை கூறலாம். சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் விமான சேவை ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டது. இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது. இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளையும் மேம்படுத்த உதவும்.
இலங்கை – தாய்லாந்து உறவுகளைப் பலப்படுத்திகொள்வதற்கான வலுவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்கான பெருமளவான விடயங்கள் பற்றி அறியப்பட்டதோடு, இரு நாடுகளுக்கு இடையில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்குள் பெரும் அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய தாய்லாந்து முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடினோம். விவசாயம், மீன்பிடி, துறைகளில் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
குறிப்பாக பௌத்த தலங்களுக்கு அண்மையில் சுற்றுலாத்துறை மற்றும் கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆலோசித்தோம். இருநாடுகளுக்கு இடையிலான சுற்றுலாவின் போது வீசா இன்றிச் செல்வதற்கான ஒப்பந்தத்தில் கைசாத்திடுவது குறித்தும் ஆராயவும் இணக்கம் எட்டப்பட்டது. அதற்குரிய பணிகளை அதிகாரிகள் விரைவில் நிறைவு செய்வர் என எதிர்பார்க்கிறோம்.
கடற்றொழில், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், சுற்றுலா, காலநிலை மாற்றம், பொது சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இலங்கை அரச அதிகாரிகளுக்கு திறன் மேம்பாடு, நிபுணத்துவப் பகிர்வு பயிற்சிகளை தாய்லாந்து சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான TICA பல வருடங்களாக வழங்கியுள்ளது. அதற்காக தாய்லாந்து பிரதமர் மற்றும் தாய்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.
மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகியவற்றை எதிர்த்து இரு நாடுகளின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே உளவுத்துறை தகவல் பரிமாற்றம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்தும் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கம் (BIMSTEC) ஆசிய ஒத்துழைப்புக்கான கலந்துரையாடல் ACD மற்றும் ஆசிய வலய நாடுகளின் அமைப்பு ASEAN Regional Forum (ARF) உள்ளிட்ட அமைப்புக்களின் கலந்துரையாடல்களின் போது இலங்கை மற்றும் தாய்லாந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்தாலோசித்தோம்.
தாய்லாந்து, BIMSTEC இன் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, BIMSTEC அமைப்பை வளமான, ஈடுகொடுக்கும் இயலுமை கொண்ட வலயமாக மேம்படுத்தும் நோக்கில், நிலையான மற்றும் சீரான வளர்ச்சியை இலக்காக கொண்டு முன்மொழிந்த Bangkok Vision 2030 என்பவற்றை வரவேற்கிறோம். இந்து சமுத்திர வலயத்தின் பங்குதாரர்கள் என்ற வகையில் தாய்லாந்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.
இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச களங்களிலும் சிறப்பாக செயல்படுகின்றன. வளர்ந்து வரும் புதிய உலகிற்கான வரைவை வடிவமைப்பதில் பயனளிக்க கூடிய வகையில் செல்வாக்கு செலுத்த தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட உலகளாவிய தென் துருவத்தில் ஒருமித்த நிலைப்பாட்டினை கொண்ட நாடுகள் செய்ய வேண்டிய ஏராளமான விடயங்கள் உள்ளன என்பதை தாய்லாந்து பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கான முக்கியமான உபாய மார்க்கமாக கிழக்காசிய மற்றும் ஆசியான் வலயத்தினால் எதிர்கால முன்னேற்றத்தை உறுதி செய்யக்கூடிய தரப்புக்களுடன் இருதரப்பு வர்த்தகங்களைப் பலப்படுத்து ஏனைய பங்குதாரர்களுடன் தொடர்புபட்டு செயற்படுவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். அதேநேரம் எங்கள் மக்களின் செழிப்பை உறுதி செய்வதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
ஆசிய நூற்றாண்டு உதயமாகும் போது, ஏற்கனவே எமக்கிடையில் காணப்படும் பாரம்பரிய நட்பின் அடிப்படையில் இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் ஒத்துழைப்புக்கான பெருமளவான வாய்ப்புக்கள் உருவாகும் என நம்புகிறோம்.
தென்கிழக்காசியாவுடன் பொருளாதார உறவை வலுப்படுத்துவதே எனது அரசின் வெளியுறவுக் கொள்கையாகும். ஆசிய மற்றும் பசுபிக் வலயத்தின் 15 நாடுகள் மற்றும் உலகின் மொத்த தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் சனத்தொகையில் 30% ஐ உள்வாங்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்த வலயமும் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதார கூட்டமைப்புமான RCEPஇன் ஒரு பகுதியாக இணையவும் நாம் தயாராக இருக்கிறோம்.
இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், அதன் மீட்சி மற்றும் வளர்ச்சியில் சர்வதேச நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளது. அதற்கிணங்க, இலங்கை பொருளாதார மாற்றம் மற்றும் ஆசியாவுடனான ஒருங்கிணைப்பின் மிக முக்கியமான பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், இதற்காக தாய்லாந்தின் ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்தக் கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டின் பின்னர், எமது வர்த்தக சமூகத்தினர் இலங்கை – தாய்லாந்து வர்த்தக ஒன்றுகூடலில் சந்திக்கவுள்ளனர். தாய்லாந்தின் 21 நிறுவனங்களின் உயர்மட்ட வர்த்தகக் குழு, உணவு மற்றும் உணவு பொதியிடல், சுகாதாரம், வலுசக்தி, விருந்தோம்பல், சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையின் வர்த்தக சமூகத்தினருடன் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் உள்ள வலுவான ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
இது தாய்லாந்து பிரதமரிடமும் என்னிடமும் நேரடியாக கேட்டறிந்து, வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்வதற்கு எமது நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ள வாய்ப்பாக இருக்கும். எதிர்காலத்தில், இரு நாடுகளின் நிறுவனங்களும் தொடர்ந்து தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், இதுபோன்ற பல சந்தர்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம்.
பொருளாதார ரீதியிலும், எமது இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் மத உறவுகளை மேலும் உறுதிப்படுத்திய இலங்கைக்கான விஜயம் குறித்து பிரதமர் தவிசின் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளுடன் நெருக்கமாக செயற்பட எதிர்பார்க்கின்றேன் என்பதையும் குறிப்பிட வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin),
“இந்த நேரத்தில், கௌரவ ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைத்த அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மிகுந்த கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பிற்பகல், ஜனாதிபதியும் நானும் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டோம். அங்கு பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கடந்துரையாடினோம். நமது இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை, குறிப்பாக தேரவாத பௌத்தத்தின் அடிப்படையில் நமது வலுவான மற்றும் நெருக்கமான உறவுகளை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
அத்துடன், எமது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின்படி, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் கணிசமானளவு வளர்ச்சியடையும் என நான் நம்புகிறேன்.
இன்று மாலை நடைபெறவுள்ள இலங்கை – தாய்லாந்து வர்த்தக ஒன்றுகூடல் இரு தரப்பினருக்கும் பல பாரிய வர்த்தக வாய்ப்புகளை திறந்து வைக்கும். இந்த நிலையில், இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு தனியார் துறையையும் ஊக்குவிக்கின்றோம்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு மேலதிகமாக இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இன்று கைச்சாத்திட்டுள்ளோம்.
அதில் முதலாவது, புதிய விமான சேவைகள் ஒப்பந்தமானது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் விநியோக சேவைகளை மேம்படுத்தும். இலங்கை இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் திறன் மேம்பாடு, தகவல் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு ஆகியவற்றில் இரு தரப்புக்கும் ஒரு படி முன்னோக்கிய விடயமாக இந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிடலாம்.
அந்தமான் கடலை தாய்லாந்து வளைகுடாவுடன் இணைக்கும் தரைப்பாலம் திட்டம் மூலம் தாய்லாந்தை தென்கிழக்கு ஆசியாவின் விநியோக மையமாக மாற்றுவதையும் பசுபிக் சமுத்திரத்திற்கும் இந்து சமுத்திரத்திற்கும் இடையிலான போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தரைப்பாலம் திட்டத்திற்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதன் ஊடாக தாய்லாந்தும் இலங்கையும் கைகோர்க்க முடியும்.
அது மாத்திரமன்றி, குறிப்பாக மீன்பிடி, உணவு பொதியிடல், சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் பசுமை வலு சக்தி உள்ளிட்ட இலக்கு மயப்பட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகளை ஊக்குவிக்க நாம் இணங்கியுள்ளோம்.
சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை, தாய் ஏர்வேஸ் இன்டர்நேஷனல் (Thai Airways International) மூலம் இந்த ஆண்டு மார்ச் 31 முதல் பெங்கொக் மற்றும் கொழும்புக்கு இடையே நாளாந்த வணிக விமானப் பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாய் ஏர்வேஸ் விமானப் பயணங்கள் மீண்டும் ஆரம்பிப்பது இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தும். இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையே கடல்சார் சுற்றுலாவை தாய்லாந்து முன்மொழிகிறது.
மேலும், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான கலாச்சார மற்றும் பௌத்த சுற்றுலாவை மேம்படுத்துவது எமது கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய விடயமாகும்.
விசா இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், இரு நாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு பொருளாதார ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும்.
விசா இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்வது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்தும் இரு தரப்பிலும் கலந்தாலோசிக்கப்படுகிறது.
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் முதன்மையான கவனம் செலுத்தி 2024-2025 இரண்டாண்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையில் மனித வள மேம்பாட்டிற்கான தாய்லாந்தின் ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
கடல் அலங்கார மீன் வளர்ப்புத் துறையில் நிபுணர்களின் சமீபத்திய பரிமாற்றங்களின் வெற்றியைப் பற்றியும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
யானைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கூட்டு முயற்சிக்கும் நாம் தயாராகி வருகிறோம்.
கடந்த ஆண்டு முத்துராஜா மற்றும் சக்சுரினை மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அழைத்து வர இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை தாய்லாந்து அரசாங்கம் பாராட்டுகிறது.
மற்றைய இரண்டு யானைகள் எங்களின் நட்பு மற்றும் நெருங்கிய உறவின் அடையாளமாக இருப்பதால், அவற்றை நன்றாகப் பராமரிக்கும் அர்ப்பணிப்புக்காக இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நானும் இருதரப்பு மட்டத்தில் மாத்திரமன்றி குறிப்பாக BIMSTEC, இந்து சமுத்திர வலய நாடுகளின் சங்கம் (IORA) மற்றும் ASEAN பிராந்திய மன்றம் ஆகிய பல தரப்பினருடன் எமது கூட்டுப் பெறுமதிகள் மற்றும் இலக்குகளை முழுமையாக அடையவும் எதிர்பார்க்கின்றோம்.
இந்த ஆண்டு ஆறாவது BIMSTEC மாநாட்டை நடத்தும் தாய்லாந்து, அதில் இலங்கையின் செயலூக்கமான மற்றும் பயனுள்ள பங்களிப்பை எதிர்பார்க்கிறது.
தாய்லாந்து 2025 முதல் 2027 வரை மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக விண்ணப்பிக்கும் ஆசியான் வலய மன்றத்தின் வேட்பாளராக உள்ளதுடன், மேலும் இந்த மாநாட்டிற்கான உறவுகளை மேம்படுத்துவதில் மத்தியஸ்தராகவும் நாம் பெயர் பெற்றுள்ளோம்.
தாய்லாந்தும் இலங்கையும் இணைந்து இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக மனித உரிமைகளை மேம்படுத்துவதில் திறம்பட செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.
நாளை நான் கலந்துகொள்ளவிருக்கும் இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.” என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.