ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி

இலங்கையின் 75ஆவது சுதந்திரத்தின தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள், துன்பங்களைச் சகித்துக்கொண்டு நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்ததால் எம்மால் மெதுவாக முன்னேற முடிந்தது. இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லும் போது, சிரமங்கள் யாவும் மறைந்துவிடும். வாழ்க்கைச் சுமை குறையும் பொருளாதாரம் வலுவடையும். இலங்கை தாய்க்கு மீண்டும் விடிவு கிட்டும்.

1948 இல் இலங்கை சுதந்திர நாடாக மாறிய போது, இலங்கை கீழத்தேய பிராந்தியத்தில் வளர்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கான அனைத்து பின்னணி காரணிகளும் எங்களிடம் இருந்தன. ஆனால் இறுதியில் நாம் வங்குரோத்தடைந்த நாடாக மாற நேரிட்டது.

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. இலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதால், இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மீண்டும் சுபீட்சத்தைக் கொண்டுவரவும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வோம்.

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பெருமைமிக்க பணிக்கு இலங்கையிலும் நாட்டுக்கு வெளியிலும் வாழும் அனைத்து இலங்கையர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.