இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் விளாசி 209 ரன்கள் குவித்து அசத்தினார் யஷஸ்வி. அவரின் இந்த இன்னிங்ஸின் காரணமாக இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. அவருக்கு கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரின் பாராட்டுக்கு யஷஸ்வி நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருக்கும் , யஷஸ்வி ஜெய்ஸ்வால், “ஒவ்வொரு பந்தையும் ரசித்தேன், இப்படியான தருணத்தில் என்னை வெளிப்படுத்துவது நன்றாக இருந்தது. இந்த பெருமையான நேரத்தை விளக்குவதற்கு என்னிடம் பல வார்த்தைகள் இல்லை. நான் எனது இன்னிங்ஸை ரசித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சதம் அடித்தவுடன் அதனை டபுளாக்க நினைத்தேன். இரட்டை சதத்தை நிறைவு செய்தபோது, என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த தருணத்தை கொண்டாடி மகிழ விரும்புகிறேன்.” என கூறினார்.
மேலும், தன்னுடைய இரட்டை சதத்துக்கு பாராட்டு தெரிவித்த சச்சின் டெண்டுல்கருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார். சச்சின் டெண்டுல்கர் பதிலளிக்கும்போது” மிக்க நன்றி ஐயா…உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும். தொடர்ந்து முயற்சி செய்து மேலும் கற்றுக்கொள்வேன்” என்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எடுத்திருக்கும் ரன்களில் 50 சதவீத ரன்களுக்கு மேல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருவர் எடுத்ததே ஆகும். ஒட்டுமொத்த அணியும் 187 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் மட்டும் 209 ரன்கள் எடுத்தார். யஷஸ்வியைத் தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் 50 ரன்களைக் கடக்கவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை 253 ரன்களுக்கு ஆல் அவுட் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 143 ரன்கள் முன்னிலை பெற்றது குறிப்பிட்டத்தக்கது.