பிப்ரவரி 2-ம் தேதி `நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2023′ விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டின் பொருளாதார இலக்குகள் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக தமிழ்நாட்டின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு பற்றி அவர் பேசுகையில், “இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு. 28 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார மதிப்புள்ள மாநிலம். வெறும் 4% நிலப்பரப்பு, சுமார் 6% மக்கள் தொகை. ஆனால், நம் பங்களிப்பு நாட்டுக்கு முக்கியமானது.
நாடு விடுதலை பெற்றபோது, பீஹாருக்கும், தமிழ்நாட்டுக்கும் வறுமை நிலையில் பெரிய வித்தியாசம் இல்லை. இன்று நாம் பெற்றுள்ள வெற்றிகள் மிக அதிகம். நம்மிடம் கனிமவள செல்வங்கள் இல்லை. மனிதவளத்தில் கவனம் செலுத்தியதே நமது வெற்றிக்குக் காரணம். மனிதவளத்தைத் தொடர்ந்து மேம்படுத்தினால் நமது வெற்றியைத் தக்கவைக்கலாம். 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட தமிழ்நாட்டுக்கு மிக முக்கியம் மனிதவளம்.
தமிழ்நாட்டில் நிறைய கல்விக்கூடங்கள் இருக்கின்றன. அதில் படிப்பவர்கள் நல்ல நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவோடுதான் வெளியே வருகிறார்கள் என்கிற விமர்சனம் இருக்கிறது. அதில் உண்மையின் சதவிகிதம் சற்று அதிகம். ஆனால் நிலைமை மாறி வருகிறது. தொழில்முனைவோர் இப்போது கல்வி நிறுவனங்களில் இருந்தே வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் புத்தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளால் இந்தியாவில் நாம் கீழ்நிலையில் இருந்து சிறப்பாக செயல்படும் மாநிலமாக வளர்ந்திருக்கிறோம். தொழில்முனைவோரை உருவாக்குவதில் நமது வெற்றி அடங்கி இருக்கிறது.
வேகமாக மாறிவரும் உலகில், ஒவ்வொரு மனிதனும் அல்லது ஒவ்வொரு நிறுவனமும் தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். வேளாண்மை, வேளாண் விற்பனை, உணவுப் பொருள்களைப் பதனிடுதல் ஆகிய தொழில்கள் முக்கியம். இவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இருக்கிறது. இப்போது எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னிலைக்கு வந்திருக்கிறோம். உயர் தர வேலைகளில் கவனம் செலுத்துகிறோம். செயற்கை நுண்ணறிவுத் துறையையும் கவனித்து வருகிறோம். பசுமை எரிசக்தி துறையில் நாம் பின் தங்கிவிடக்கூடாது.
தோல் சாராத காலணி தொழில் துறையில், உலகளவில் முதல் ஐந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே கால் பதித்துவிட்டன அல்லது அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில். இந்த துறையில் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் ஒரு தொழிற்சாலை 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. அதில் 80 சதவிகிதத்தினர் பெண்கள். இந்த ஆலைகள் தொழில் ரீதியாக பின் தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த தலைமுறையினர் அறிவுப் பொருளாதாரத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள். அதற்கு தனித்திறன், தொழில் முனைவு திறன் போன்றவை முக்கியம்” என்று பேசினார்.