`நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2023′ விழா பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற்றது. இதில் தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணி பங்கேற்றார். இவ்விழாவில் ‘Focus and Frugality gives Prosperity’ என்ற தலைப்பில் கவனம் மற்றும் சிக்கனத்தின் முக்கியத்துவம் பற்றி வேலுமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது…
“பொருளாதாரம் என்கிற கோபுரத்தில் மேலே பணக்காரன், கீழே ஏழை. இடையில் 10 பிரிவுகளைப் போட்டால், கீழே இருந்து மேலே வரை கடின உழைப்பால் முன்னேறி வந்திருக்கிறேன். இதற்கு உன்னிப்பான கவனமும், சிக்கனமும்தான் முக்கியமான காரணங்கள்.
இந்த இரண்டும் என்னிடம் இல்லாமல் போயிருந்தால், ஒரு ஏழை விவசாயியின் மகன் தேசிய அளவில் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாது.
நான் 10 ஆண்டுகள் விஞ்ஞானியாக வேலை செய்துவிட்டு தொழிலதிபர் ஆகியிருக்கிறேன். 10 ஆண்டுகள் அரசு கெசட்டட் ஆபீசராக இருந்து வேலை செய்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனத்தி தொடங்கி, வெற்றி பெற்றிருக்கிறேன்.
எனது தாயார் மிகவும் சிக்கனமான பெண். அவரிடம் இருந்த 70 ரூபாய் வைத்துக்கொண்டு எந்த பெரிய செலவு வந்தாலும் சமாளிப்பார். அவர் கடன் வாங்கவே மாட்டார்.
எனது மனைவி வங்கியில் வேலை செய்தார். எனக்கு அரசு வேலை. அவர் சம்பளத்தில் பாதியை சேமித்து, எனது முழுச் சம்பளத்தையும் சேமித்து 1996-ம் ஆண்டிலேயே 2 லட்சம் ரூபாய் சேமிப்பு வைத்திருந்தார். அது இன்றைக்கு 2 கோடிக்கு சமம். எனது மனைவியின் Focus மற்றும் Frugality தான் எனது வெற்றிக்கு காரணம்.
100 கிலோ உடலில் தைராய்டு சுரப்பி வெறும் 15 கிராம். நான் அந்த 15 கிராமில் மட்டும் கவனம் செலுத்தினேன். உலகிலேயே ஒரு சுரப்பியில் கவனம் செலுத்தி ஒரு பிராண்டை உருவாக்கிய ஒரே ஆள் நான்தான்.
என் நிறுவனத்துக்கு கடன்களே இல்லை. நான் என்றும் கடன் வாங்கியதும் இல்லை.
நான் தொடங்கிய தைரோகேர் நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தொட்டது. நான் செய்த ஒரே தவறு சேவைக்கான விலையை குறைத்ததுதான். ஆனால், அதே தவறை அனைவரும் செய்யுங்கள். அப்படி செய்த எந்தவொரு நிறுவனமும் தோற்றுப் போனதில்லை. அதுதான் சமூகப் பொறுப்பு.
தேனைக் கொண்டுவரும் தேனீக்கள் அந்தத் தேனில் விழுந்தால், அதன் உயிர் போய்விடும். பணத்தை சம்பாதிக்கும் மனிதன் அந்தப் பணத்தில் விழுந்தால் காணாமல் போய்விடும். நாம் வேறு, நாம் சம்பாதிக்கும் பணம் வேறு என்று பிரித்துப் பார்க்க நமக்குத் தெரிய வேண்டும்.
25,000 புதியவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறேம். புதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் வேலை கொடுங்கள். செலவு செய்துகொண்டே இருந்தால் நீங்கள் பிச்சைக்காரர் ஆகிவிடுவீர்கள். முதலீடு செய்துகொண்டே இருந்தால் நீங்கள் பேரரசன் ஆவீர்கள்” என்று தைரோகேர் வேலுமணி பேசப் பேச அவார்டு நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவரும் ரசித்துக் கேட்டனர்!