நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், மத்திய அரசை வீழ்த்திவிட வேண்டும் என்று `இந்தியா’ கூட்டணியும், எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க-வும் முழு வீச்சில் களமிறங்கியிருக்கின்றன. அதன்படி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க-வும் நேரடியாக மோத இருக்கின்றன. கூட்டணியில் யாருக்கு சீட், வேட்பாளர் யார் என்று முடிவெடுப்பதற்கு முன்பாகவே, கடந்த ஆண்டே சுவர் விளம்பரங்களை துவக்கிவிட்டது பா.ஜ.க. புதுச்சேரியில் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 2,55,826 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். அதையடுத்து வந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம் வெற்றிப்பெற்றாலும், முதல்வர் ரங்கசாமி நிறுத்திய வேட்பாளர் 2,47,956 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த வாக்கு வங்கிகளை மனதில் வைத்துக்கொண்டு, 2024 தேர்தலிலும் நாமே போட்டியிடலாம் என்று, முதல்வர் ரங்கசாமியிடம் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் கட்சியின் சீனியர்கள். ஆனால், `நாம் வெற்றி பெற்றாலும் அவர்கள் சொல்வதைத்தானே கேட்க வேண்டும். அதற்கு ஏன் நாம் செலவு செய்யனும்?’ என்று அவர்களின் கருத்தை மௌனமாக கடந்துவிட்டாராம் முதல்வர் ரங்கசாமி. அதேநேரத்தில், எங்கெல்லாம் நமக்கு வெற்றி வாய்ப்புகள் எளிதாக இருக்கும் என்று, பா.ஜ.க தலைமை போட்ட பட்டியலில் முதலில் இடம்பெற்றது புதுச்சேரிதான். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலையான வாக்கு வங்கியுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து நாம் உருவிய நமச்சிவாயத்தை நிறுத்தினால் நமக்கு வெற்றி உறுதி என்று டெல்லிக்கு தகவலை தட்டி விட்டிருக்கின்றனர் மாநில பா.ஜ.க நிர்வாகிகள். உடனே உற்சாகமான பா.ஜ.க தலைமை, கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் தங்கள் கட்சியின் நிர்வாகிகளை முதல்வர் ரங்கசாமியிடம் பேச்சு வார்த்தைக்கு அனுப்பியது.
முதல்வர் ரங்கசாமியை சந்தித்த அவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தலைமை முடிவெடுத்திருக்கிறது. அது குறித்து உங்களிடம் பேச வேண்டும் என்று தயங்கியபடி கூறியிருக்கிறார்கள். உடனே `இதில் என்ன பேச இருக்கிறது ? தாராளமாக நில்லுங்கள். யார் வேட்பாளர்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு, `உங்கள் அண்ணன் மருமகனும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம்தான்’ என்று பா.ஜ.க தரப்பு சொல்ல, தேர்தல் வேலையைப் பாருங்கள் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டாராம் ரங்கசாமி. ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், மாநில அரசியலில் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று நினைக்கிறாராம் நமச்சிவாயம். அதனால் `எம்.பி தேர்தலில் என்னை விட்டு விடுங்கள். நீங்கள் நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற வைக்கிறேன்’ என்று மேலிடத்தில் கூறி வருகிறாராம். அதேசமயம், நமச்சிவாயத்தை டெல்லிக்கு பார்சல் செய்துவிட்டால், அவரின் உள்துறை அமைச்சர் பதவியை வசப்படுத்திவிடலாம்,
என்று நினைக்கும் பா.ஜ.க-வின் சீனியர்களில் ஒருவர், `நமச்சிவாயத்தை நிறுத்தினால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும். வேறு யாரையாவது நிறுத்தினால் அது காங்கிரஸ் வெற்றிக்கு நாமே வழிவிட்டதுபோல ஆகிவிடும்’ என்று அமித் ஷாவின் காதுகளில் போட்டு வருகிறார். இந்த லாபியால் கடும் அப்செட்டில் இருக்கிறார் நமச்சிவாயம். அதனால் சீட்டை வாங்கியும் வேட்பாளர் இல்லையே என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறது பா.ஜ.க. இந்தக் குழப்ப குட்டையில் மீன் பிடிக்கத்தான் ஆளுநர் தமிழிசை வலையை வீசியிருப்பதாக கூறுகிறார்கள் உள்ளூர் பா.ஜ.க-வினர். தெலங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் இருக்கும் தமிழிசை, புதுச்சேரியில் பதவியேற்றதில் இருந்தே மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். மாநிலம் சார்ந்த எந்த பிரச்னையாக இருந்தாலும், இவரது குரல்தான் அரசாங்கத்தின் குரலாக ஒலிக்கும். பத்திரிகையாளர்களைக் கண்டாலே எட்டிக்காயாக நினைத்து விலகுபவர் முதல்வர் ரங்கசாமி.
ஆனால் அதற்கு நேர்மாறான நிலைப்பாடுடைய தமிழிசை, ஒரே நாளில் 5 அரசு விழாக்களுக்குச் சென்றாலும், அனைத்து இடங்களிலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பவர். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு என்று புகார் வந்தாலும், குடியிருப்புகளில் மழை நீர் வடியவில்லை என்றாலும் உடனே அதிகாரிகள் புடை சூழ ஆய்வுக்குச் சென்று விடுவார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மக்கள் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொள்ளவே அவர் முயற்சித்து வருகிறார். இதன் எதிர்வினையாக `ஆளுநர்தான் ஆக்டிங் முதல்வராக இருக்கிறார். முதல்வர் ரங்கசாமி டம்மியாக இருக்கிறார்’ என்று கிடைக்கும் இடத்திலெல்லாம் விமர்சித்து வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. அதேபோல `ஆளுநர் தமிழிசை அரசியல் செய்ய வேண்டுமென்றால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்யட்டும்’ என்று வெளிப்படையாக விமர்சித்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் சிவா.
இதையெல்லாம் வைத்து, `மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள். அதற்கு `அது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன். தற்போது கவர்னாக இருப்பதால் அது குறித்துப் பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாக இருக்கட்டும்’ என்றார் கூலாக. அதையடுத்து நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து கருத்துக் கூறிய தமிழிசையிடம், `மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா?’ என்று மீண்டும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `கவர்னராக தொடர்வேனா அல்லது தேர்தலா என்று முடிவு செய்துவிட்டு சொல்கிறேன்’ என்று ட்விஸ்ட் வைத்தார்.
இந்த நிலையில்தான் நேற்று டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார் தமிழிசை. அந்த சந்திப்புக்குப் பிறகு, `தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வளர்ச்சி குறித்து உள்துறை அமைச்சரிடம் விவாதித்தேன். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த, மத்திய அரசு ரூ.420 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார் தமிழிசை. ஆனால், ஆளுநர் தமிழிசை அமித் ஷாவுடன் விவாதித்த விஷயமே வேறு என்கிறார்கள் நம்மிடம் பேசிய டெல்லி பா.ஜ.க-வினர். புதுச்சேரியில் போட்டியிட நமச்சிவாயம் தயங்கி வரும் நிலையில், யாரை நிறுத்துவது என்று ஆலோசித்து வருகிறது டெல்லி தலைமை.
தகுதியான வேட்பாளரை தேர்வு செய்யாவிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு சகாயம் செய்தது போல் ஆகிவிடும் என்பதால், குழப்பத்தில் இருக்கிறது பா.ஜ.க தலைமை. இதைத் தெரிந்து கொண்டுதான், `புதுச்சேரியில் நானே போட்டியிடுகிறேன். அங்கு எனக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. அந்த மக்களுக்கும் என் மீது நல்ல மதிப்பு இருக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி அண்ணனும் எனக்கு சப்போர்ட் செய்வார். எளிதாக வென்று விடலாம். ஒருவேளை புதுச்சேரி வேண்டாமென்று நீங்கள் நினைத்தால் தூத்துக்குடியில் போட்டியிடுகிறேன்’ என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம் தமிழிசை.
இதன்மூலம் `தமிழிசை தேர்தலில் போட்டியிட தயாராகிவிட்டார். தலைமைதான் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்’ என்கின்றனர் பா.ஜ.க-வினர்.