தாவணகெரே : ”வாக்குறுதித் திட்டங்களை, இலவசங்கள் என்று கூறக்கூடாது,” என, பத்திரிகையாளர்களை முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.
தாவணகெரேயில் நேற்று நடந்த 38வது மாநில பத்திரிகையாளர்கள் மாநட்டை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தேவையில்லை. நாட்டின் ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதார சக்தியை உயர்த்துவதற்கான வாக்குறுதித் திட்டங்களை, இலவசங்கள் என்று அவர்கள் கூறக்கூடாது.
கட்சி சார்பற்ற, மதச்சார்பற்ற இத்திட்டம் வாக்குறுதி என்று அழைக்கப்படுவதில்லை. நீங்களே சரி பார்த்து எழுதுங்கள். எதையும் வெளியிடும் முன், சரி பார்க்க வேண்டும்.
ஊடகவியலாளர்கள், கெட்டவர்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்த வேண்டும். நாள் முழுதும் கணவன் – மனைவி சண்டையை காட்டாமல், சமூகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கந்து வட்டிக்காரர்களை கண்டறிந்து எழுதுங்கள். இதன் மூலம் சமூகம் சார்ந்த பத்திரிகை சாத்தியம்.
இதழியல் என்பது பணக்காரர்களின் கையில் விழுந்துவிட்டது. இதனால் பணக்காரர்களின் நலன்களுக்கு சேவை செய்வதும், ஏழைகளின் நலன்களுக்கு எதிராக எழுதுவதும் ஆபத்து. நான் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவன். கருத்து சுதந்திரம் கண்ணியமாக இருக்க வேண்டும்.
சுதந்திரத்துக்கு முந்தைய பத்திரிகைகளில், நாட்டிற்கு சுதந்திரத்தை கொண்டுவர வேண்டும் என்ற ஆசை முக்கியமாக வேலை செய்தது. சுதந்திரத்துக்கு பின், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கை முக்கியம்.
பத்திரிகைகள் மீது பொது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்பபுகள் வீண் போகாத வகையில், பத்திரிகையாளர்கள், தொழில் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது தொழில்நுட்பமும், அறிவியலும் நிறைய வளர்ந்து உள்ளன. இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் நேர்மையை விட்டு விடக்கூடாது.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement