பெலகாவி : பெற்ற தாய்க்கு உணவளிக்க முடியாததால் விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஹாவேரியின் யலகுச்சி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் வெங்கட், 30. இவரது தந்தை, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தன் தாய் சாந்தவ்வா, 55, உடன் வசித்து வந்தார்.
கிராமத்தில் வேலை கிடைக்காததால், வயிற்று பிழைப்புக்காக, நாடோடிகள் போன்று ஊர், ஊராக அலைந்தனர். வேலை கிடைத்தால் செய்வர், கிடைக்காவிட்டால் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தினர்.
கடந்த வாரம் தாயும், மகனும், ஹூப்பள்ளியில் இருந்து, ரயிலில் கோவாவுக்கு புறப்பட்டனர். அங்கும் வேலை கிடைக்காததால், ஜனவரி 30ல் மீண்டும் ஹூப்பள்ளிக்கு புறப்பட்டனர்.
பணம் இல்லாததால், டிக்கெட் வாங்க முடியவில்லை. எனவே இவர்களை டிக்கெட் பரிசோதகர், தார்வாடின், ஆள்னாவரா ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
அலைச்சல்
கோவாவில் நான்கு நாட்களாக, உணவின்றி அலைந்ததால், சாந்தவ்வா சோர்வடைந்தார். அவரை ரயில் நிலையத்தில் அமர வைத்த பசவராஜ், உணவு வாங்கி வருவதாக கூறிச் சென்றார். ஆள்னாவில் பல இடங்களில் அலைந்தும், வேலையும் கிடைக்கவில்லை; உணவும் கிடைக்கவில்லை. தன் தாய்க்கு ஒரு வேளை உணவளிக்க முடியவில்லையே என, பரிதவித்தார்.
பெலகாவி, கானாபுராவின், லிங்கனமடா கிராமத்தின் அருகில், மாமரத்தில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த, நந்தகடா போலீசார், அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை வைத்து விசாரித்தபோது, தாய், மகனை பற்றி தெரிந்தது. மகனின் உடலை தாயிடம் ஒப்படைத்தனர்.
அவரது உதவிக்கு வந்த, கதம்பா பவுன்டேஷன் நிறுவனர் ஜார்டன் கோனால்வின், தன் நண்பர்களின் உதவியுடன், பசவராஜின் உடலை சம்பிரதாயப்படி அடக்கம் செய்தார்.
ஜார்டன் கோனால்வின் கூறியதாவது:
உதவித்தொகை
கணவரை இழந்த சாந்தவ்வாவுக்கு, விதவை உதவித்தொகை கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் ‘கிரஹ லட்சுமி’ திட்டத்தின் நிதியும் கிடைக்கவில்லை. உழைக்கும் சக்தி இருந்தும், மகனுக்கு வேலை கிடைக்கவில்லை.
மகன் பசியால் இறந்தார். தாயும் அரசு சலுகை கிடைக்காமல் அவதிப்படுகிறார். ஆதரவற்ற நிலையில் உள்ள சாந்தவ்வாவுக்கு, மகளிர், குழந்தைகள் நலத்துறை அடைக்கலம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்