India vs England: இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் முதல் போட்டியில் தோல்வியை பெற காரணமாக அமைந்தது. மேலும் ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியின் காயத்தால் அவதிப்பட்டனர். இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் அவர்கள் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் இடையே கிட்டத்தட்ட 9 நாட்கள் இடைவெளி உள்ளது. இதனால் இன்னும் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கவில்லை. காரணம் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகி இருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்புவாரா? இல்லையா? என்பது சந்தேகத்தில் உள்ளது. இதன் காரணமாக இன்னும் பிசிசிஐ மீதமுள்ள போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை. மேலும் விராட் கோலி தற்போது இந்தியாவிலேயே இல்லை என்றும் வெளிநாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளை விளையாடவில்லை என்று சமீபத்தில் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா இன்னும் காயத்திலிருந்து சரியாக வில்லை என்பதால் அவர் இடம் பெற மாட்டார். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பினால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மீண்டும் பலம் வாய்ந்ததாக மாறும். மேலும் மிடில் ஆர்டரில் தற்போது சொதப்பி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓப்பனிங்கில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாட, அடுத்தடுத்து வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவதால் இந்திய அணி தடுமாறி வருகிறது. மேலும் ரஜத் பட்டிதார் மற்றும் சார்பாஸ்கான் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் இன்னிங்ஸில் ரஜத் பட்டிதார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்துள்ளார். இதனால் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தற்போதைக்கு முகமது ஷமி கணுக்கால் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது சந்தேகமே. அவர் முழு உடல் தகுதி பெற வாய்ப்புகள் குறைவு. மேலும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் முடிவை பொறுத்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.