Un-Islamic marriage Imran – wife Bushra jailed | இஸ்லாமிய முறைக்கு எதிரான திருமணம் இம்ரான் – மனைவி புஷ்ராவுக்கு சிறை

இஸ்லாமாபாத்: இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக, கடந்த 2018 ஆக., – – 2022 ஏப்., வரை பதவி வகித்தவர், இம்ரான் கான், 70.

அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவர், பாக்., தெஹ்ரீக்- – இ – -இன்சாப் கட்சியின் தலைவராகவும் உள்ளார். கடந்த 2022 ஏப்ரலில், பாக்., பார்லியில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து, இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அவர், தற்போது அங்குள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான வழக்குகளின் விசாரணை அவ்வப்போது முடிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரின் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புஷ்ரா பீவியின் முன்னாள் கணவர் கவார் மனேகா தாக்கல் செய்த மனுவில், ‘மறுமணத்துக்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை இம்ரான் – புஷ்ரா மீறியுள்ளனர்.

‘திருமணத்துக்கு முன் சட்டவிரோதமான உறவில் அவர்கள் இருந்தனர். இது கல்லால் அடித்துக் கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றமாகும்’ என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக இம்ரான் — புஷ்ரா இருவரிடமும் அடியாலா சிறையில் உள்ள நீதிமன்றத்தில், 14 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் மீதான குற்றம் உறுதியானதை அடுத்து, இருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஊழல்

பிரதமராக இருந்த காலத்தில் பெற்ற பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், அதனை விற்று சொத்து சேர்த்து ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபிக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் சமீபத்தில் வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.