ஹல்த்வானி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸாவை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழு மேற்கொண்டனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல் துறை உடனான மோதலில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் போலீஸாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசியும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதலும், வாகனங்களுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறை செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் காவல் துறை தரப்பில் 20 பேரும், பொது மக்களில் 10 பேரும் என 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். முக்கிய அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தையும் நடத்தினார்.
நீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பன்பூல்புரா பகுதியில் சுமார் 2 கி.மீ பரப்பிலான ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களை அங்கிருந்து வெளியேற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராடிய மக்கள், சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருந்தும் அவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றியதாக தெரிகிறது. நாட்டிலேயே முதல் முறையாக, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.