மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், டெல்லியில் ஒரு வாரமாகத் தன் நண்பரால் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, பல சித்ரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடலில் 20 காயங்களோடு மீட்கப்பட்ட அந்தப் பெண்ணை, போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான நபர் பராஸ். இவர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல்காரராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தொலைபேசி மூலமாக, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடன் அந்த நபருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சுமார் நான்கு மாதங்களாக தொலைபேசியில் நட்பை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பணிப்பெண் வேலை செய்வதற்காக பெங்களூருவுக்குக் கிளம்பிய அந்தப் பெண்ணை, வேலை வாங்கித் தருவதாகக் கூறி டெல்லி வர வைத்திருக்கிறார், பராஸ். பின்னர் தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் வாடகை வீட்டில் ஒரு மாத காலமாக அந்தப் பெண்ணுடன் பராஸ் தங்கி வந்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி, அந்தப் பெண் காவல்துறையினரைத் தொடர்புகொண்டு, `என்னுடைய நண்பர், என்னைத் தாக்கிச் சித்ரவதை செய்கிறார்’ எனக் கூறி, தகவல் தெரிவித்திருக்கிறார்.
உடனே போலீஸார் துரிதமாகச் செயல்பட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு பராஸ் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
“ஜனவரி மாத தொடக்கத்தில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக பெங்களூரு செல்ல திட்டமிட்ட என்னை, வேலை தேடுவதற்கு உதவுவதாகக் கூறி டெல்லி வரச் சொன்னார். அதை நம்பி நானும் வந்தேன்” என்று பாதிக்கப்பட்ட அப்பெண் கூறியதாக, செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கில் இருந்து வந்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவருடன் தொலைபேசி மூலமாக நட்பை வளர்த்துள்ளார். ஒரே வீட்டில் தங்கிய சில நாள்களுக்குப் பிறகு அப்பெண்ணை உடல்ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் அந்த இளைஞர். குறிப்பாக பராஸ் அந்த பெண்மீது சூடான பருப்பை ஊற்றி, காயங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்” என்றனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.