கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் வியாழக்கிழமை மதியம் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் இன்று மதியம் 12.48 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சம்பங்கி மார்தொட்டி முனியப்பன் கோயிலும் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கூறும்போது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி அருகிலுள்ள வனப்பகுதியில், லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், 5 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பேரிடர் மேலாண் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு அலுவலர்களும் சென்று பார்த்துள்ளனர். மேலும், லேசான நில அதிர்வு என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் நில அதிர்வை யாரும் உணர முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றார்.