புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிட திரண்ட நிலையில், அவர்கள் நொய்டாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்றத்தை இன்று முற்றுகையிட டிராக்டர், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புறப்பட்டனர். பாரதிய விவசாயிகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்டு நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பாலத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அப்போது, மேம்பாலம் அருகே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகள் மீது ஏறி கீழே குதித்து பேரணியைத் தொடர விவசாயிகள் முயன்றனர். எனினும், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதோடு, விவசாயிகளின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு அந்த சாலையை தவிர்க்குமாறு பொதுமக்களை போலீசார் முன்கூட்டியே கேட்டுக்கொண்டனர். நொய்டாவின் துணை காவல் ஆணையர் அணில் யாதவ் இதனைத் தெரிவித்தார். பொது மக்களுக்கான மாற்றுப் பாதைகள் குறித்த அறிக்கையும் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் சுக்பிர் யாதவ், “நொய்டாவின் மகாமாயா மேம்பாலத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நொய்டா வந்துள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து அரசு கையப்படுத்திய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 64.7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், குடியிருப்புக்கான நிலங்களை வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கை மீது உத்தரப் பிரதேச அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால், இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட நாங்கள் திட்டமிட்டிருந்தோம்” என தெரிவித்தார்.