இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. இதில், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட வன்முறைகள் அரங்கேறின. நாடு முழுதும் நடந்த வன்முறை சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று பொது தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புக்கு நடுவே நடந்த ஓட்டுப் பதிவின்போது, இணைய மற்றும் மொபைல் போன் சேவைகள் முடக்கப்பட்டன.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டன.
காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு, மாலை 5:00 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலை ஒட்டி, நாடு முழுதும் 6.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இங்குள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்புக்கு சென்ற போலீசாரின் வாகனம் மீது, மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில், நான்கு போலீசார் பலியாகினர். வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவம் காரணமாக பல இடங்களில் ஓட்டுப் பதிவு மந்தமாக இருந்தது. மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
மீதியுள்ள இடங்களில், 60 பெண்களுக்கும், 10 அந்நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியைச் சேர்ந்தவர்களால் இந்த 70 இடங்களும் நிரப்பப்படும்.
பதிவு செய்யப்பட்ட 167 கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 5,121 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, மற்றொரு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முன்னாள் பிரதமர் இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியில், இம்ரான் கான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு, வேறு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்