புதுடில்லி, மியான்மர் நாட்டுடனான எல்லையை மூடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, எல்லையிலிருந்து நம் நாட்டிற்குள் மியான்மர் மக்கள் விசா இன்றி நடமாடும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சம்
நம் அண்டை நாடான மியான்மருடன், 1,643 கி.மீ., துார எல்லையை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
இது, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அமைந்து உள்ளது.
மணிப்பூர், 390 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மிசோரம் –510, அருணாச்சல பிரதேசம் – 520, நாகாலாந்து — 215 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
நாட்டின் கிழக்கு நோக்கி என்ற கொள்கை மற்றும் கிழக்கே உள்ள நாடுகளுடனான சுமுகமான உறவு கொள்கையின்படி, மியான்மருடன், எப்.எம்.ஆர்., எனப்படும் தடையில்லா நடமாட்ட முறை, 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி, இரு நாடுகளிலும், எவ்வித ஆவணங்களும் இல்லாமல், 16 கி.மீ., வரை பயணிக்க முடியும். இந்நிலையில், மியான்மரில் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு ஆயுதக் குழுக்கள் இணைந்து ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றன.
குறிப்பாக நம் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளை, இந்தக் குழுக்கள் கைப்பற்றியுள்ளன.
இதையடுத்து, அங்குள்ள மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள், நம் நாட்டுக்குள் தஞ்சம்அடைந்து வருகின்றனர்.
இதைத் தவிர, அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள், நம் நாட்டுக்குள் ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்தி வருவதும் நடந்து வருகிறது.
இதைத் தவிர, வடகிழக்கு மாநிலங்களில், மியான்மரைச் சேர்ந்த பலர், சட்டவிரோதமாக நுழைந்து வசித்து வருகின்றனர்.
மணிப்பூரில், பெரும்பான்மையினராக உள்ள மெய்டி மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே கடந்தாண்டில் இருந்து மோதல் நடந்து வருகிறது. தற்போது சற்று அடங்கியிருந்தாலும், இந்தப் பிரச்னை தொடர்ந்து நிலவி வருகிறது.
முக்கிய கோரிக்கை
மியான்மரில் இருந்து ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் வருவதை தடுக்க வேண்டும் என்பதே, மெய்டி சமூகத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களின் நில கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மியான்மருடனான எல்லையில், வேலி தடுப்புகள் அமைக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இதற்கான விரிவான திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மியான்மருடனான எல்லையை மூடவும், தற்போதுள்ள தாராள நடமாட்ட முறையை கைவிடவும், மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இதன் மீதான நடவடிக்கை குறித்து, வெளியுறவுத் துறை ஆய்வு செய்து வருவதாக, அமித் ஷா தெரிவித்துள்ளார்.
‘நம் நாட்டின் எல்லையை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
‘இதன்படி, வடகிழக்கு மாநிலங்களின் நில கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, தாராள நடமாட்ட முறையை கைவிட பரிந்துரைத்துள்ளோம். இதன் மீது, வெளியுறவுத் துறை ஆய்வு செய்கிறது’ என, சமூக வலைதளப் பதிவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்