ஆண்களைவிடப் பெண்களின் பங்களிப்புக் குறைவாக இருப்பதால் வரவுசெலவுத்திட்ட செயல்முறையில் பாலினக் கண்ணோட்டமும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்

இலங்கையின் முறைசார் ஊழியர் படையணியில் பாரம்பரியாமாக ஆண்களைவிடப் பெண்களின் பங்களிப்புக் குறைவாக இருப்பதால் வரவுசெலவுத்திட்ட செயல்முறையில் பாலினக் கண்ணோட்டமும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல மற்றும் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே ஆகியோரின் தலைமையில் அண்மையில் (08) நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதில் உத்தேச பாலினக் கண்ணோட்டத்திலான வரவுசெலவுத்திட்ட சட்டமூலம் குறித்து பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதற்கமைய வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கும்போதும், நடைமுறைப்படுத்தும்போதும், மதிப்பீடு செய்யும்போதும் பாலின மதிப்பாய்வுகளை உள்ளடக்குவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், பாலினக் கண்ணோட்டத்திலான வரவுசெலவுத்திட்ட தயாரிப்பின் தாக்கத்தைக் கண்காணிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான 25% இடஒதுக்கீட்டை மூலோபாயமாக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தலைமைப் பொறுப்பில் உள்ள பெண்களைப் பற்றிய சமூகக் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் என்பது ஒன்றியத்தின் கருத்தாக இருந்தது. பாராளுமன்றத்தில் 25% அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கும், நாட்டின் மக்கள் தொகையில் 50% உள்ள பெண்களை இப்பணிக்காக அணிதிரட்டுவதன் முக்கியத்துவத்தையும் ஒன்றியம் வலியுறுத்தியது.

அதேநேரம், 2-5 வயது வரையுள்ள குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காகச் செல்லும் விடயம் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹினி குமாரி, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, கௌரவ மஞ்சுளா திசாநாயக, கௌரவ கோகிலா குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.