விஜய் தேவரகொண்டா தம்பி படத்தின் மீது கதை திருட்டு புகார்
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அவை கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த வருடம் அவரது நடிப்பில் பேபி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் நாளிலிருந்தே வரவேற்பை பெற்றதுடன் 50 கோடியை தாண்டி வசூலித்தது.. இந்த படத்தை இயக்குனர் சாய் ராஜேஷ் என்பவர் இயக்கியிருந்தார்.
தற்போது தான் எழுதிய பிரேமிச்சோடு என்கிற கதையை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என ஒளிப்பதிவாளரும் குறும்பட இயக்குனருமான ஷிரின் ஸ்ரீராம் என்பவர் ஐதராபாத்தில் உள்ள ராய்துர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கண்ணா ப்ளீஸ் என்கிற என்கிற பெயரில் தான் முதலில் உருவாக்கிய இந்த கதையை இயக்குனர் சாய் ராஜேஷிடம் தான் கூறியதாகவும் அந்த கதையை தன்னுடைய அனுமதியின்றி பேபி படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமாரிடம் சாய் ராஜேஷ் கூறி பட வாய்ப்பு பெற்றுள்ளார் என்றும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.
ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்று கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து கதை திருட்டு குறித்து இவர் புகார் கூறியுள்ளது பரபரப்பை மட்டுமல்ல இதற்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்கிற சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேபி திரைப்படம் வேறு மொழிகளில் ரீமேக் ஆகும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றது. இந்த படத்தில் கதை விவகாரத்தில் சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஷிரின் ஸ்ரீராமுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு அதில் திருப்தியான விதத்தில் சமரசம் ஏற்படாததால் தான் இப்படி காலம் தாழ்ந்து அவர் புகார் அளித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.