சிறு பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை குறையுங்கள்
சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
‛‛சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பு. இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது. இந்த புதிய கட்டணங்களை பிப்., 23 முதல் வெளியாகும் படங்களுக்கு தாங்கள் வசூலிக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த மாற்றம் மக்கள் மத்தியில் மீண்டும் திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வாய்ப்பு உள்ளது
சிறு பட்ஜெட் படங்கள் அதாவது ரூ.5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை, 150 திரையரங்களுக்கு மிகாமல் தமிழ்நாட்டில் வெளியாகும் படங்களுக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் நகரங்களில் டிக்கெட் கட்டணம் அதிகபட்சம் ரூ.100, பிற மாவட்டங்களில் ரூ.80 மற்றும் ஜிஎஸ்டி வரி பெற்றுக் கொள்ளலாம். மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு (ரூ.5 கோடிக்கு அதிகம்) மேலே சொன்ன 5 நகரங்களில் டிக்கெட் கட்டணம் ரூ.150 மற்றும் பிற நகரங்களில் ரூ.120 மற்றும் ஜிஎஸ்டி வரி பெற்று கொள்ளலாம்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல சிறு பட்ஜெட் படங்கள் தான் வெளியாக வாய்ப்பு உள்ளது. மே மாதம் முதல் தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும். மக்கள் திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வைக்க வேண்டும். எங்களின் இந்த திட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்''
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.