மும்பை: மின்சார கார்களின் விலையை குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களில் முதல் முறையாக இத்தகைய நகர்வை டாடா நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மின்சார கார்களின் விலை ரூ.1.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1945-ல் நிறுவப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சொகுசு கார்கள், கமர்ஷியல் வாகனங்கள், பிக்அப் ட்ரக்குகள், பேசஞ்சர் வாகனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மின்சார கார்களின் விலையை குறைத்துள்ளது அந்நிறுவனம்.
அந்த வகையில் நெக்சான் மின்சார காரின் விலை ரூ.1.20 லட்சம் வரையிலும், டியாகோ மின்சார காரின் விலை ரூ.70 ஆயிரம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. மூலப்பொருள் விலை குறைந்த காரணத்தால் கார்களின் விலையை குறைத்துள்ளதாக டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கார் உற்பத்திக்கான செலவில் பேட்டரியின் பங்கு பிரதானமாகும். பேட்டரி செல் விலை குறைந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு வாடிக்கையாளருக்கும் ஆதாயம் அளிக்கும் வகையில் விலை குறைப்பை டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்துள்ளதாக தகவல். இதன் மூலம் மின்சார கார்களின் விற்பனை புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.