குருகிராம்:புதுடில்லி அருகே, வேலை வாங்கித் தருவதாக, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேர், கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, உத்தர பிரதேச மாநித்தில், இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணை
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. திருமணத்துக்குப் பின், புதுடில்லி அருகே ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் குடியேறினார்.
மேலும், குருகிராம் நகரில் வேலை தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது, குருகிராம் அருகே சக்கர்பூரில் வசிக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற ஜெப்ரின் கல்கோ என்பவர் அறிமுகம் ஆனார்.
தான் வேலை வாங்கித் தருவதாக கூறிய அருண் குமார், கடந்த நவம்பர் 10ம் தேதி, சக்கர்பூரில் உள்ள தன் அறைக்கு வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அதை நம்பிய இளம்பெண்ணும் அங்கு தனியாக சென்றார். அங்கு அருண் குமார் மற்றும் அவரது நண்பர்கள் இசுராஜ், சுமர், அகம்ராஜ் ஆகியோரும் இருந்தனர்.
நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
அந்த அறையிலேயே அந்தப் பெண்ணை அடைத்து வைத்து, தினமும் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்தக் கும்பலின் பிடியில் இருந்து 15 நாட்களுக்குப் பின் தப்பி வந்த இளம்பெண், குருகிராம் 29வது செக்டார் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரும் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
மற்றொரு சம்பவம்
உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் சவானி அருகே ஒரு கிராமத்தில், இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பைக்கில் இருவர் நேற்று முன் தினம் மாலை கடத்திச் சென்றனர்.
காட்டுப் பகுதியில் அந்தப் பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். மீண்டும் பைக்கில் ஏற்றி அழைத்து வந்து வீட்டில் விட்டுச் சென்றனர்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகார்படி, சவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து, முக்கியக் குற்றவாளியை நேற்று கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்