அபுதாபி, மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அபுதாபி விமான நிலையத்தில், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் ஜையது அல் நஹ்யான் வரவேற்றார். பிரதமரை கட்டித் தழுவி, தன் அன்பை அவர் பகிர்ந்து கொண்டார்.
கொண்டாட்டம்
இரு தரப்பு பேச்சுக்கு பின், அபுதாபியில் உள்ள ஹோட்டலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு குவிந்திருந்த, இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வண்ணமிகு பாரம்பரிய உடைகளுடன், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என, பல தரப்பினரும் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.
மோடியை பாராட்டி அவர்கள் கோஷமிட்டனர். சிலர் வாத்தியங்களை இசைத்து, நாட்டியமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனால் அந்த இடமே, கொண்டாட்டத்தில் அதிர்ந்தது. கைகளை அசைத்து, வாழ்த்துகளை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
அங்கிருந்த சிலருடன் கைகளை குலுக்கி, செல்பி எடுத்து வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார் மோடி.
முன்னதாக, புதுடில்லி, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் அபுதாபி வளாகத்தில் படிக்கும் மாணவர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
அதிபருடன் சந்திப்பு
முன்னதாக, யு.ஏ.இ., அதிபர் முகமது பின் ஜையதுவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதன்பின், இருதரப்பு முதலீடுகள் உட்பட பல்வேறு துறைகளில், எட்டு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அபுதாபி வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடியின் உரை பக்கம் 7
ரூபே கார்டு அறிமுகம்
நம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள, யு.பி.ஐ., பரிவர்த்தனை சேவையை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி, மொரீஷியஸ் மற்றும் இலங்கையிலும், இந்த சேவையை பயன்படுத்த முடியும். இது இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்வோருக்கு பெரிதும் உதவும்.இதன் தொடர்ச்சியாக, யு.பி.ஐ., உடன் இணைக்கப்பட்ட ‘ரூபே கார்டு’ மற்றும் யு.ஏ.இ.,யின். ‘ஜேவான் கார்டு’ ஆகியவற்றை பரஸ்பரம் இரு நாடுகளில் பயன்படுத்தும் சேவையை பிரதமர் மோடி மற்றும் யு.ஏ.இ., அதிபர் ஷேக் முகமது பின் ஜையது அல் நஹ்யான் நேற்று துவக்கி வைத்தனர்.
அதிபருடன் சந்திப்பு
அபுதாபிக்கு சென்ற பிரதமர் மோடியை, யு.ஏ.இ., அதிபர் முகமது பின் ஜையது, விமான நிலையத்தில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினர். அதன்பின், இரு நாட்டு குழுவினர் ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பு உறவுகள், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.இதைத் தவிர, இருதரப்பு முதலீடுகள் உள்பட பல்வேறு துறைகளில், எட்டு புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்