கடந்த நான்கரை ஆண்டுகளாக என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என, தெரியாமல் இருந்த உத்தரகன்னடா பா.ஜ., – எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சுறுசுறுப்படைந்துள்ளார்.
அவருக்கு சீட் கொடுத்தால் தேர்தல் பணி செய்ய மாட்டோம் என, தொண்டர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
கர்நாடக பா.ஜ., லோக்சபா தேர்தலுக்கு, மும்முரமாக தயாராகி வருகிறது. மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பம்பரமாக சுற்றி வந்து கட்சியை பலப்படுத்துகிறார். மகன் மாநில தலைவரான பின், முன்னாள் முதல்வர் எடியூரப்பா இளைஞராக மாறி, மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுஉள்ளார்.
தலைவர்கள் அச்சம்
பா.ஜ., மேலிடம் வேட்பாளர்களை தேடுகிறது. தற்போதைய எம்.பி.,க்கள் பலருக்கு இம்முறை சீட் கொடுக்காமல், இளசுகளுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறது. ஆனால் இதுவே தனக்கு, ‘பூமராங்’ ஆகுமோ என்ற அச்சமும், கட்சியை வாட்டி வதைக்கிறது.
இதற்கிடையில் உத்தரகன்னடா தொகுதியில், தற்போதைய எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவுக்கு, சீட் கொடுக்கக் கூடாது என, தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆறு முறை தொடர்ந்து, எம்.பி.,யானவர். ஒருமுறை மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. திறன் வளர்ச்சித்துறை வழங்கப்பட்டது. இது வேலையே இல்லாத துறை என, வசைபாடினார். துறையை சரியாக நிர்வகிக்கவில்லை. இதனால் அவருக்கு பதவி கை நழுவியது.
எதிரிகள் அதிகரிப்பு
கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின், அனந்தகுமார் ஹெக்டேவை தொகுதியில் காண முடியவில்லை. கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அரசியலுக்கு முழுக்கு போடுவதாக, தனக்கு நெருக்கமானவரிடம் கூறியதாக, தகவல் வெளியானது. கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நான்கரை ஆண்டுகளாக அஞ்ஞான வாசத்தில் இருந்தவரை போன்று, தேர்தல் நெருங்கியதும் திடீரென தொகுதியில் தலை காண்பித்துள்ளார். தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுஉள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சியை தர்ம சங்கடத்தில் தள்ளுகிறார். சமீபத்தில் முதல்வர் சித்தராமையாவை ஒருமையில் பேசி, காங்கிரசாரின் கோபத்துக்கு ஆளானார். இவரை பா.ஜ.,வினரே கண்டித்தனர்.
ஷிவமொகா விமான நிலையத்தை துவக்கிவைக்க, பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தபோதும், அனந்தகுமார் ஹெக்டே நிகழ்ச்சிக்கு வரவில்லை. எம்.பி.,யாக மக்களின் குறைகளை கேட்டறியவில்லை. இத்தகையவருக்கு, சீட் கொடுக்க வேண்டுமா என, தொண்டர்களும், உள்ளூர் தலைவர்களும் கேள்வி எழுப்புகின்றனர். அவருக்கு சீட் கொடுத்தால் தேர்தல் வேலை பார்க்க மாட்டோம் என, கட்சியினர் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
தனக்கு எதிர்ப்பு கிளம்புவதை கண்ட அவர், சமீபத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திராவை சந்தித்துப் பேசினார். அவர்கள் சீட் கொடுப்பதாக உறுதி ஏதும் அளிக்கவில்லை. தொகுதி மக்களே மறந்துவிட்ட அனந்தகுமார் ஹெக்டேவுக்கு சீட் கிடைப்பது சந்தேகம். முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி உட்பட, சில தலைவர்களின் பெயர் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்