புதுடில்லி, தேசிய விருதுகள் பட்டியலில், முன்னாள் பிரதமர் இந்திரா மற்றும் நடிகை நர்கீஸ் தத் ஆகியோர் பெயர்களில் வழங்கப்பட்ட விருதுகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தேசிய அளவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசால் வழங்கப்படும் இந்த விருது, திரைத்துறையில் மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. தேசிய விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசு தொகை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங்கள் தேவை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளன.
இதற்காக, கொரோனா பெருந்தொற்று காலத்தின் போதே மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியினர் பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து பல மாற்றங்களை பரிந்துரை செய்தனர். அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, சிறந்த புதுமுக இயக்குனருக்கு முன்னாள் பிரதமர் இந்திராவின் பெயரில் வழங்கப்பட்டு வந்த விருது இனி, சிறந்த புதுமுக இயக்குனர் என்ற பெயரிலேயே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பரிசு தொகையை இயக்குனரும், தயாரிப்பாளரும் பகிர்ந்து வந்தனர். இனி, அந்த பரிசு தொகை இயக்குனருக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த திரைப்படத்துக்கான விருது நடிகை நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வந்தன. இனி இந்த விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டை ஊக்குவிக்கும் திரைப்படம் என்ற பெயரில் வழங்கப்படும்.
அதே போல, திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தாதாசாஹேப் பால்கே விருதின் பரிசு தொகை, 10 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்வர்ண கமல் விருதுகளுக்கான பரிசு தொகை, 3 லட்சம் ரூபாயாகவும், ரஜத் கமல் விருதுகளுக்கான பரிசு தொகை, 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்