டெல்லி,
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற நிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
ஆனாலும், டெல்லி எல்லைகளான சம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களில் தலைவர்களுடன் மத்திய அரசு இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்யாமல் கொண்டுவர முடியாது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்கள் மத்திய அரசுடன் முறையான கட்டமைப்புடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்’ என்றார்.