சென்னையின் பிரதான சாலையான வடபழனி 100 அடி சாலையில், மழைநீர் வடிகால் திட்டத்துக்கான பணிகள் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. அதற்காக சாலையில் குழி தோண்டும்போது, கழிவுநீர் கால்வாய் உடைந்து, மழைநீர் வடிகால் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழி முழுவதும் கழிவு நீர் நிரம்பியது. இதன் காரணமாக 100 அடி சாலையிலிருந்து அழகிரி நகர் 5-வது நகருக்குச் செல்லும் வழி முற்றிலும் அடைக்கப்பட்டது. 2023 டிசம்பரில் அடைக்கப்பட்ட தெரு, இரண்டு மாதங்களாக அடைக்கப்பட்டே இருக்கிறது. இன்று வரை கழிவுநீர் அந்தப் பகுதியில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், இது குறித்த தகவல் கிடைக்கப்பெற்று, அந்தப் பகுதிக்கு நேரில் சென்று விசாரித்தோம். கழிவு நீர் தேங்கியிருப்பதால், ஒரு தெருவே முழுமையாக அடைபட்டுக்கிடந்தது. வாகனத்தில் அந்த தெருவுக்குச் செல்ல வேண்டுமானால், அடுத்தத் தெரு வழியாகச் சுற்றித்தான் செல்ல முடியும். நடந்து செல்பவர்கள் அழகிரி நகர் – வடபழனி 100 அடிச் சாலை இந்த இரண்டு பகுதியையும் இணைப்பாக கொண்டுள்ள டீ கடை வழியாக மட்டுமே செல்ல முடிகிறது. ஆனால், டீ கடைக்கு முன்னாலும் குழி தோண்டப்பட்டதால் வெளியான கழிவு நீர் அங்கேயும் தேங்கி நிற்கிறது.
மழைநீர் வடிகால் பணி செய்யும் ஒப்பந்ததாரர் அமைத்துக் கொடுத்த பேரிகார்டை பாலமாக அமைத்து, அதன் மூலமாகத்தான் மக்கள் சென்று வருகின்றனர். பேரிகார்டை கடக்கும்போது நம் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற எண்ணத்தோடுதான் கடக்கவேண்டியிருக்கிறது. முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் செல்பவர்களுக்கெல்லாம் இதைக் கடப்பது ஆபத்தாக இருப்பதைப் பார்க்க முடிந்தது.
அழகிரி நகர் 5-வது நகருக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டு, ஏறத்தாழ இரண்டு மாதங்களான நிலையிலும், இதுவரை சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் சத்யா நம்மிடம் பேசுகையில், “என்னுடைய வீடு இந்த தெருவில்தான் இருக்கிறது. இந்த வேலைகள் ஆரம்பிக்கும் போதிலிருந்தே எனக்குச் சிரமம்தான். கழிவு நீர் கலந்ததற்குப் பிறகு 100 அடி சாலைக்கு வருவதென்றால், நான் அடுத்தத் தெருவைச் சுற்றித்தான் வரவேண்டியிருக்கிறது. இந்த வேலை ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு சிரமம்தான்.
இரண்டு மாதங்களாக இந்த வேலையே முடிக்கப்படாத நிலையில், 100 அடி சாலையை இணைக்கும் தெருவில் தொடங்கப்பட்ட வேலையும் அப்படியே இருக்கிறது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்கூட வரமுடியாத நிலைதான் தொடர்கிறது. ஆம்புலன்ஸ் வர வேண்டுமானால் வடபழனி கோயில் வழியாகத்தான் வரமுடியும். மேலும், அது ஒருவழிச் சாலை என்பதால், ஆம்புலன்ஸும் தெருவைச் சுற்றித்தான் வெளியேற வேண்டும். இந்த அவதி இன்னும் எத்தனை நாள்களுக்கு எனத் தெரியவில்லை. மேலும், இது குறித்து `நம்ம சென்னை’ செயலியில் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரும் ஒரு வாரத்திலேயே மூடப்பட்டுவிட்டது” என நொந்து கொண்டார்.
இது தொடர்பாக அந்தப் பகுதியில் ஹார்டுவேர் கடை வைத்திருக்கும் காதர் சுல்தானிடம் பேசினோம். “டிசம்பர் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட வேலை, பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால், பொங்கலுக்கு முன்பே நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பிறகு ஆரம்பிக்கவே இல்லை. இதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய இழப்பு. என் கடைக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாதை என் சொந்த செலவில் அமைக்கப்பட்டது. அரசு மக்களுக்காக செயல்படுத்தும் ஒரு திட்டம் நிறைவேற, காலம் முன்பின் ஆகும்.
அதனால், சில சிரமங்களைச் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என இருந்தேன். ஆனால், இரண்டு மாதங்களாகியும் எந்தப் பணியும் நிறைவடையவில்லை. என் கடைக்கான பாதையும் அமைத்துத் தரவில்லை. ஹார்டுவேர்ஸ் கடை என்பதால், கனமான பெரிய பொருள்கள் விற்றால்தான் எனக்கு லாபம். ஆனால், என்னால் வியாபாரம் செய்ய முடியவில்லை. அப்படியே விற்றாலும், சிறு பாதை வழியாக அந்த கனமான பொருள்களை எடுத்துச் செல்வதும் வாடிக்கையாளருக்கு கஷ்டம். மேலும், இந்தக் கழிவுநீர் துர்நாற்றத்தால், தினமும் 1 லிட்டர் பினாயில் ஊற்ற வேண்டிய நிலை, கொசுத் தொல்லை என சிரமமாக இருக்கிறது. இதன் காரணமாகவே மாலையில் சீக்கிரமே கடையை மூடிவிடுகிறேன்.
இந்த வேலையைத் துரிதமாக முடித்துத் தரவேண்டும் என அதிகாரிகளை தொடர்புகொண்டால், அவர்கள் ஒப்பந்ததாரரைக் கைகாட்டுகிறார்கள். ஒப்பந்ததாரரிடம் கேட்டால், அவரோ இது கழிவு நீர் உடைந்த பிரச்னை. இதை குடிநீர் வாரியம் தான் சரிசெய்ய வேண்டுமென்று பதிலளிக்கிறார். இப்படி மாறி மாறி கைகாட்டுகிறார்களே தவிர… தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் இங்கே கஷ்டப்படுவதோ என்னைப் போன்று கடை வைத்திருப்பவர்களும், பொதுமக்களுடம், இந்த தெருவில் வசிப்பவர்களும்தான்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
“இரண்டு மாதங்களாக அழகிரி நகர் 5-வது தெரு அடைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற வேலைகளின்போது சிரமம், சிக்கல்கள் ஏற்படுவது யதார்த்தம்தான். ஆனால், இத்தனை நாள்களாகியும் முடிக்கப்படாத வேலைகள், இது தொடர்பாக அளிக்கப்படும் எந்தப் புகாருக்கும் சரியான பதிலின்றி, நிராதரவாக விடுவது எந்த வகையில் நியாயம். எனவே, இந்த வேலையைத் துரிதமாகச் செய்தால்தான் எங்களுடைய வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பும்” என அந்தப் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.