ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்திற்கு இந்திய நிர்வாகம் ஓய்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷப் பண்ட் காயமடைந்த பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கே.எஸ் பரத் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 ரன்கள் சராசரி உடன் 221 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதோடு இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய முதல் இரண்டு போட்டியிலும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கே.எஸ்.பரத்திற்கு ஓய்வு வழங்க உள்ளதாகவும் அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் கே.எஸ். பரத்தே விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
துருவ் ஜூரெல் ராஜ்கோட்டில் தனது முதல் டெஸ்டில் களமிறங்கக்கூடும் என்ற செய்தியை நான் கேள்விப்படுகிறேன். இது சரியா அல்லது தவறா என்று யோசித்து வருகிறேன். தனிப்பட்ட முறையில் கேட்டால், கே.எஸ்.பாரத் அவரது விக்கெட் கீப்பிங்கின் அடிப்படையில் முதலில் தீர்மானிக்கப்பட வேண்டும்
என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி நாம் என்ன பார்த்தோம். நான் மோசமாக எதையும் காணவில்லை. அவர் நன்றாக வேலை செய்கிறார்.
இவை கடினமான ஆடுகளங்கள். அதனால்தான் நீங்கள் (அணி நிர்வாகம்) கே.எல். ராகுலை விக்கெட் கீப்பிங் பணிக்கு தேர்வு செய்யவில்லை என்று சொன்னீர்கள். உங்களுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் கீப்பர் வேண்டும் என்று சொன்னீர்கள். அதனால் அந்த ஸ்பெஷலிஸ்ட் கீப்பர் ரோலில் பரத் தனது கடமையை நிறைவேற்றி வருகிறார்.
ஐதராபாத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினார். உண்மையில், இரண்டாவது இன்னிங்ஸில், அவர் சிறிது நேரம் பேட்டிங் செய்திருந்தால், இந்தியா போட்டியை வென்றிருக்கும். 3வது போட்டியில் அவர் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
அணி நிர்வாகம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கே.எஸ். பரத் இன்னும் ஒரு டெஸ்டாவது விளையாட வேண்டும். அவர் 5 டெஸ்ட்களிலும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் பேட்டிங் முக்கியம் என்றால், அவருக்கு இன்னும் ஒரு போட்டியாவது கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்