சிறையில் செந்தில் பாலாஜி!
கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அந்த சமயத்தில், வேலை வாங்கி தருவதாகப் பணம் வாங்கியதாகச் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சூழலில் அவர் திமுக-வுக்கு வந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்த விவகாரத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு நடுவில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் மாற்றித் தரப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த ஏழு மாதங்களாகச் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி!
பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் சொல்லப்பட்ட ஒரு தகவல், செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கிறார். அவர் வெளியே சென்றால் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்பதுதான். கடந்த முறை ஜாமீன் மனு மீதான விசாரணை வரும்போது, “அரசு ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணிநேரம் சிறையிலிருந்தால் அவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார். செந்தில் பாலாஜி 243 நாள்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். அவர் எப்படி அமைச்சராகப் பதவியில் நீடிக்கிறார்” என்று நீதிபதியே கேள்வியெழுப்பினார்.
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களும், “அமலாக்கத்துறை தரப்பு விசாரணை நிறைவு செய்யப்பட்டதால்தான் ஜாமீன் கேட்கிறோம். அமைச்சர் பதவியில் இருப்பதை ஜாமீனுக்கு எதிரான முகாந்திரமாகக் கொண்டால் உயரிய பதவியில் இருப்பவர்கள் யாரும் ஜாமீன் கோர முடியாது” என்று வாதிடப்பட்டது.
இந்த சூழலில் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் எழுதியிருந்தார். அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஆளுநரும் ராஜினாமாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
ஜாமீன் மட்டுமே குறிக்கோள்!
ஏழு மாதங்களுக்குப் பிறகு இப்போது செந்தில் பாலாஜி எதற்குத் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறித்து, திமுக மூத்த உறுப்பினர்கள், அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம், “இன்றைய சூழலில் செந்தில் பாலாஜிக்குத் தனது அமைச்சர் பதவியை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. முதலிலிருந்தே அமலாக்கத்துறை தரப்பிலிருந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்கிறார். வெளியில் சென்றால் அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். திமுக தரப்பிலும் இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்திருப்பதன் மூலம் கட்சி அவருடன் இருக்கிறது என்று செந்தில் பாலாஜி தைரியமாக இருப்பார் என்று நினைத்தது. ஆனால், அந்த அமைச்சர் பதவியே அவர் வெளியில் வருவதற்கு பெரும் தடையாக இருந்துவிட்டது.
இதனால்தான் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தற்போது அமைச்சர் பதவியில் இருக்கிறார், சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்ற வாதத்தை அமலாக்கத்துறையால் வலுவாக எடுத்து வைக்க முடியாது. அடுத்தது, செந்தில் பாலாஜி தம்பி அசோக் பலமுறை சம்மன் அனுப்பியும் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று சொல்வார்கள். தற்போதைய நிலையில், இந்த வழக்கு செல்லும் வழியைப் பார்த்தால் அசோக் கூடிய விரைவில் ஆஜராகவே வாய்ப்பு இருக்கிறது. நேற்று தினம் நடந்த விசாரணையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கண்டிப்பாக ஜாமீன் கிடைக்கும். இந்த அனைத்து மூவுக்கு பின்னல் இருப்பதும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மட்டுமே. அதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக… அதற்குத் தேவையான ஏற்பாடுகளை திமுக சட்டத்துறை தீவிரமாகச் செய்துவருகிறது” என்றார்கள் விரிவாக.
நேற்றைய ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்பது பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், “செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்த கூடும்” என குறிப்பிடப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. திமுக தரப்பில், இந்த ராஜினாமா மூலம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என நம்புகிறார்கள். அதே நேரம் டெல்லியில் அமலாக்கத்துறையால் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் தனது பதவியை ராஜினாமா செய்தும் தற்போது வரையிலும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை குறிப்பிடுகிறார்கள் அமலாக்கத்துறையினர். அமைச்சர் பதவி ராஜினாமா மூலம், ஜாமீன் சாத்தியமாகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY