சென்னை: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் உள்வாங்கி வளர்வதில் தமிழ் மொழி என்றும் தனித்து நிற்கும். அந்த வகையில் ‘திருக்குறள் ஏஐ’ பாட் அறிமுகமாகி உள்ளது. இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சலுக்கு ஏற்ப திருக்குறள் ஜெனரேட்டிவ் ஏஐ பாட் உருவில் அவதரித்துள்ளது என இதனை குறிப்பிடலாம்.
அந்த வகையில் திருக்குறள் ஏஐ பாட் மூலம் வள்ளுவரின் 1,330 குறளையும் பயனர்கள் பெறலாம். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என வள்ளுவர் எழுதிய முப்பாலிலும் உள்ள 133 அதிகாரங்களில் உள்ள அனைத்து குறள் மற்றும் அதற்கான பொருள் விளக்கத்தை இதில் உள்ள குறள் பட்டியல் மூலம் பயனர்கள் பெறலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, பரிமேலழகர், சாலமன் பாப்பையா மற்றும் மு.வரதராசனார் ஆகியோரது பொருள் விளக்கம் ஒவ்வொரு குறளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது ஏதேனும் ஒரு சொல்லின் அடிப்படையில் உரையாடல் வடிவில் இந்த ஏஐ பாட் உடன் பயனர்கள் வினவ முடியும். உதாரணமாக ‘அறம்’ என இதில் பயனர்கள் உள்ளிட்டால், அதனை இந்த பாட் உள்வாங்கிக் கொண்டு அது சார்ந்த அனைத்து குறள்களும் பட்டியலிடப்படுகிறது. இதன் வடிவமைப்பு மற்றும் பயனர் பயன்பாடும் எளிதான வகையில் உள்ளது. தமிழில் தகவல்கள் கிடைக்கிறது.
அண்மையில் நடைபெற்ற ‘கணித்தமிழ் 24’ நிகழ்வில் ‘திருக்குறள் ஏஐ’ அறிமுகம் செய்யப்பட்டது. Kissflow எனும் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. “ஜெனரேட்டிவ் ஏஐ-யில் திருக்குறளை பயன்படுத்துவதற்கும், திருக்குறள் சார்ந்த அனைத்து விவரங்களையும் மென்பொருளில் கொண்டு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. தற்போது திருக்குறளை வழங்கி வரும் இணையதளங்களில் விளம்பரங்கள் அதிகம் உள்ளன. மேலும், முறையான தேடல் சார்ந்த வாய்ப்புகளும் அதில் பயனர்களுக்கு இல்லை. அதை கருத்தில் கொண்டு சுமார் ஒரு மாத காலத்துக்குள் இதனை வடிவமைத்தோம். பாட புத்தகத்தை கடந்து அனைவரிடத்திலும் திருக்குறளை கொண்டு செல்லும் முயற்சி இது” என அந்நிறுவனத்தின் சிஇஓ சுரேஷ் சம்பந்தம் தெரிவித்துள்ளார். | திருக்குறள் ஏஐ லிங்க் |