லூதியானா: டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பஞ்சாப்பின் பல இடங்களில் விவசாயிகள் தண்வாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் டெல்லி – அமிர்தசரஸ் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டன. விவசாயிகள் பல சுங்கச்சாவடிகளில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.
பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய ஹரியாணா போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதிய கிஷான் யூனியன் (எக்தா உக்ரஹான்) மற்றும் பிகேயு தகுன்தா (தனேர்) அமைப்புகள் பஞ்சாப்பில் வியாழக்கிழமை நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்படனர். இந்த மறியல் போராட்டம் மாலை 4 மணி வரை நடந்தது. டெல்லி அமிர்தசரஸ் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் ரயில்வே அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களை வேறு வழித்தடத்தில் திருப்பி விட்டனர். டெல்லி செல்லும் ரயில்கள் சண்டிகர் வழியாகவும், அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் பகுதிக்கு செல்லும் ரயில்கள் லோஹியன் காஸ் பகுதிக்கும் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்து இந்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “‘டெல்லியில் இருந்து வரும் சதாப்தி மற்றும் ஷான் இ பஞ்சாப் விரைவு ரயில் ஆகியவை லூதியானாவில் நிறுத்தப்பட்டன” என்று தெரிவித்தார்.
இதனிடையே, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அழைப்பின் பேரில், பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுங்கச்சாவடி அதிகாரிகளை கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களைச் செல்ல அனுமதிக்க வலியுறுத்தினர். பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ஹர்மித் சிங் கடியன், “டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
அதேபோல், ஹோசியார்பூரில் ஜலந்தர் – பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது மத்திய அரசுக்கும், ஹரியாணா அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர். விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள், அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாய கடன், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பஞ்சாப்பில் இருந்து பிப்.13-ம் தேதி டெல்லி நோக்கி செல்லும் பேரணியைத் தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் – ஹரியாணா, ஹரியாணா – டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும்.
விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியாணா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர். இரண்டாவது நாளான நேற்றும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.