19ம் நூற்றாண்டில் கேரளத்தின் வடக்கு மலபார் பகுதியில் நடந்துகொண்டிருக்கும் போர் காரணமாக, அரண்மனையில் பாடல் பாடும் சமூகத்தைச் சேர்ந்த தேவன் (அர்ஜுன் அசோகன்), தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் காட்டுக்குள் தப்பி ஓடுகிறான். அக்காட்டில் தன் சமையல்காரருடன் (சித்தார்த் பரதன்) வாழ்ந்து வரும் பெரியவரான கொடுமன் போட்டியின் (மம்மூட்டி) பாழடைந்த அரண்மனையில் தஞ்சம் புகுகிறான். அமானுஷ்யங்களும், மர்மங்களும் நிறைந்த அந்த அரண்மனையே அவனுக்குச் சிறையாக மாற, அதிலிருந்து தேவன் எப்படித் தப்பித்தான் என்பதைப் பேசுகிறது ராகுல் சதாசிவனின் `பிரமயுகம்’ (Bramayugam) திரைப்படம்.
கொடுமன் போட்டியாகப் படம் முழுவதும் வீற்றிருக்கிறார் மம்மூட்டி. தன் ட்ரேட் மார்க்கான குரல், சிரிப்பு, உட்கார்ந்திருக்கும் தோரணை போன்றவற்றோடு, வசன உச்சரிப்பின் தொனி, மிரட்டலான பார்வை போன்றவற்றாலும், அக்கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார். சில காட்சிகளில் அவரின் குரல், நிழல் கூட அவரின் இருப்பை ஈடுசெய்யும் வகையில் நம்மை நடுங்க வைக்கின்றன.
அர்ஜுன் அசோகனுடைய தேவன் கதாபாத்திரத்தின் வழியாகவே பார்வையாளர்களுக்குப் படம் விரிகிறது. ஒரு சாதுவாக வந்து, பயம், பதற்றம், நடுக்கும், கோபம், எழுச்சி எனப் பரிணமிப்பதோடு, எல்லா தருணத்திலும் அழுத்தமான நடிப்பைக் கோரும் அக்கதாபாத்திரத்தை, ஆழமாக உள்வாங்கி கச்சிதமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். தொடக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், படத்தின் முக்கிய கட்டத்தில் பிரதானமாக உருமாறும் அக்கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் சித்தார்த் பரதன். மணிகண்டன்.ஆர், அமல்டா லிஸ் ஆகியோர் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டி, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறார்கள்.
ஒரேயொரு பாழடைந்த அரண்மனையைக் கதைக்களமாகக் கொண்டு, முழுக்க கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு, ஷஹனாத் ஜலாலின் ஒளிப்பதிவு முதுகெலும்பாக இருக்கிறது. கறுப்பு வெள்ளை நிறத்திற்கான ஒளியமைப்போடு, ஷஹனாத்தின் கச்சிதமான ப்ரேம்களும் கைகோர்த்து, திகிலையும் அமானுஷ்யத்தையும் ஆழமாகக் கடத்தியிருக்கின்றன. முக்கியமாக, மம்மூட்டிக்கு வைக்கப்பட ப்ரேம்கள், அக்கதாபாத்திரத்தின் இன்னொரு குரலாகவே மாறியிருக்கிறது. கிறிஸ்டோ சேவியரின் இசையில் பாடல்கள் கதையோட்டத்தோடே பயணிக்கின்றன. அவற்றுள் ‘பூமணி மாளிக’ பாடல் ரசிக்க வைக்கிறது.
படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவே வருகிறது பின்னணி இசை. மர்மம், வஞ்சகம், ஆக்ரோஷம், பயம் எனப் பல உணர்வுகளை, நாட்டுப்புற மற்றும் கர்னாடக இசைக்கருவிகளின் கலவையால் வீரியமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார். திகிலான காட்சிகளில் சிக்ஸர் அடிக்கிறார். த்ரில் காட்சிகளில் மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் மனவோட்டத்தைக் காட்டும் காட்சிகளிலும் ஷஃபீக் முகமது அலியின் செறிவான படத்தொகுப்பை உணர முடிகிறது.
ஒரு பாழடைந்த கேரள அரண்மனையை (கொட்டாரம்) எந்த மிகையும் இன்றி, அத்தனை நுணுக்கத்தோடு நேர்த்தியாக கண்முன் கொண்டுவந்திருக்கிறது ஜோதிஷ் சங்கரின் கலை இயக்கம். ஜெயதேவன் சக்கடத்தின் ஒலி வடிவமைப்பும், ரோனெக்ஸ் சேவியர் மற்றும் ஜார்ஜ் எஸ்ஸுன் ஒப்பனையும் கவனிக்க வைக்கின்றன.
18-ம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டயத்தில் வாழ்ந்த எழுத்தாளரான கொட்டாரத்தில் சங்குண்ணி, கேரள மக்களின் வாய்வழி கதைகளிலும், மத நம்பிக்கைகளிலும் உள்ள மர்மமான கதைகளை நாட்டுப்புறக் கதைகளாக ‘ஐதீகமாலா’ என்ற தொகுப்பாக எழுதினார். அதில் உள்ள கதை ஒன்றைக் கதைக்கருவாக எடுத்துள்ளார் இயக்குநர் ராகுல் சதாசிவன்.
தொடக்கம் முதலே நிதானமாகவும், கதையிலிருந்து விலகாதவாறு நகர்கிறது திரைக்கதை. அதேநேரம் இந்த நிதானம் சோர்வைத் தராத வகையில், நடிகர்களின் நடிப்பும் அளவான நீளத்துடன் எழுதப்பட்டுள்ள காட்சிகளும் பார்த்துக் கொள்கின்றன. இந்து மத புராணங்கள், சமஸ்கிருத பாடல்களின் மேற்கோள்கள், தத்துவார்த்த விவாதங்கள், சின்ன சின்ன நாட்டுப்புறக் கதைகள், கதாபாத்திரங்களின் விவரிப்புகள் எனப் பல விஷயங்களைக் கடத்தும் படத்தின் வசனங்கள், அலுப்பூட்டும் வகையில் ‘வழவழ’ என நீளாமல், மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட விதத்தில், எழுத்தாளர் T.D.ராமகிருஷ்ணனின் பங்கு பாராட்டுக்குரியது. முதற்பாதி முழுவதையும் அரண்மனையின் அமானுஷ்யத்தையும், மம்மூட்டியின் மர்மத்தையும் மட்டுமே பேசுகிறது என்றாலும், அதை ஆழமாகவே பேசுகிறது.
மம்மூட்டியின் பின்கதை, சாத்தான் கதை, அரண்மனை வரலாறு எனப் பல கிளைக்கதைகள் சுவாரஸ்யமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், மொத்த படமுமே ஒரே நேர்கோட்டில் வடிவ ரீதியாகப் புதுமையில்லாத திரைக்கதையால் சொல்லப்பட்டிருக்கிறது. கிளைக்கதைகளை இன்னும் பெரிதாக்கி, பல அடுக்குகளாக இரண்டாம் பாதி திரைக்கதை சென்றிருந்தால் டெக்னிக்கலாகச் சிறப்பாக இருக்கும் படத்துக்கு எழுத்தும் நியாயம் சேர்த்திருக்கும். இந்தத் திரைக்கதையில் பார்வையாளர்களின் பங்களிப்பு பெரிதும் இல்லாததால், வெறும் கதையாக மட்டுமே படம் நம்மில் பதிகிறது.
இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சில ட்விஸ்ட்டுகள் சுவாரஸ்யத்தைத் தந்தாலும், கதையின் பிரதான ட்விஸ்ட்டை முதற்பாதியிலேயே கண்டுபிடித்துவிட முடிவது ஏமாற்றம். படத்தின் சில இடங்களில் காட்டப்படும் யட்சி குறித்துச் சரியான முடிவும் படத்தில் இல்லை.
பிற மனிதர்களை ஆளும் சக்தி, அதன் மீதான பேராசை, அது ஒருவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்ற கேள்விக்கான பதிலை, கேரள நாட்டுப்புறக் கதை ஒன்றை மையமாக வைத்துத் திகிலூட்டும் வகையில் சொல்ல முயன்று, அதில் சாதித்தும் இருக்கிறார் இயக்குநர். ஆனால், வடிவ ரீதியாகத் திரைக்கதையில் இன்னும் கவனத்தைச் செலுத்தி, கூர் செய்திருந்தால், இந்த `பிரமயுகம்’ இன்னும் நம்மைப் பிரமிக்க வைத்திருக்கும்.