Electoral Bond Scheme… Void Supreme Court Verdict | தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி :’மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது’ என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, இதுவரை யார் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு பணம் நன்கொடையாக அளித்துள்ளனர் என்ற, முழு பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, 2017ல் அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கைமாறினால், கருப்புப் பணத்தை தடுக்கலாம் என்பதால், இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அவர் கூறினார்.

தேர்தல் பத்திரங்கள் 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் என ஐந்து மதிப்புகளில் தயாரிக்கப்பட்டன.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும், அவை விற்கப்படும் என்றும் ஜெட்லி அறிவித்தார்.

தனி நபர்களோ, கம்பெனிகளோ பத்திரங்களை வாங்கி அவர்கள் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம்.அதை பெற்றுக் கொள்ளும் கட்சி, 15 நாட்களுக்குள், அதை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த கட்சியின் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்துக்காக தனியாக சட்டம் இயற்றவில்லை. 2017 நிதி மசோதாவில் இத்திட்டம் சேர்க்கப்பட்டதால், அதற்கான அவசியம் எழவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது.நிதி சட்டத்தில் இத்திட்டம் இடம் பெற்றதால், வேறு மூன்று சட்டங்களில் ஐந்து திருத்தங்கள் செய்ய நேரிட்டது.

ரிசர்வ் பாங்க் சட்டம், வருமான வரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவை அந்த மூன்று. திருத்தங்களால் மூன்று சட்டங்களும் பலவீனம் அடைவதாக எதிர்க்கட்சிகளும், நிபுணர்களும் சுட்டிக் காட்டினர். அரசு அந்தக் கருத்தை ஏற்கவில்லை.

அடுத்த ஆண்டில், அரசாணை வாயிலாக தேர்தல் பத்திரங்கள் திட்டம் செயலுக்கு வந்தது. அப்போது, மேலும் சில திருத்தங்களை சேர்த்தது அரசு. கம்பெனிகள் தங்களின் நிகர லாபத்தில், 7.5 சதவீதத்துக்கு மிகாமல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்ற நிபந்தனையைநீக்கி, எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என,கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்தது அரசு.வெளிநாட்டு கம்பெனிகள் இந்திய கட்சிகளுக்கு நன்கொடை வழங்கக் கூடாது என இருந்த தடையையும் நீக்கியது. இந்தியாவில் உள்ள கிளைகள் வாயிலாக, அவை இங்குள்ள கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்று கதவு திறக்கப்பட்டது.மோடி அரசின் இந்த திட்டம், பெரும் ஊழலுக்கு வழி வகுக்குமே தவிர, கருப்பு பணத்தை தடுக்கப்போவது இல்லை என, எதிர்க்கட்சிகள் கூறின.

ஆட்சேபம்

ரிசர்வ் பாங்க், தேர்தல் கமிஷன் ஆகியவையும், அரசின் திட்டத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்தன. தேர்தல் பத்திரம் வாங்குவது யார், கட்சிக்கு கொடுப்பது யார் என்ற விஷயங்கள, ரகசியமாக வைக்கப்படுவது சரியல்ல; தேர்தலின் வெளிப்படை தன்மையை அது பாதிக்கும் என்று தேர்தல் கமிஷன் ஆட்சேபித்தது. ரூபாய் நோட்டு, கடன் பத்திரங்கள் ஆகியவற்றை அச்சடிக்கும் அதிகாரம் படைத்த ரிசர்வ் பாங்க், தன் கீழே உள்ள ஸ்டேட் பாங்க் அத்தகைய அதிகாரத்தை பெறுவது நிர்வாக கோளாறுக்கு வழி வகுக்கும் என, ஆட்சேபம் தெரிவித்தது.நொடித்துப் போன கம்பெனிகள் கூட அரசின் சலுகையை பெறுவதற்காக, கருப்புப் பணம் செலவிட்டு பத்திரங்கள் வாங்கி நன்கொடை கொடுக்க வழி ஏற்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என வருமான வரி துறை எச்சரித்தது. அரசு அந்த ஆட்சேபங்களை எல்லாம் நிராகரித்தது.
இதையடுத்து, தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்குர் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. விசாரிக்கும் போது, இந்த திட்டம் குறித்த பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் யார் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது, அவர்களின் அடிப்படை உரிமை அல்லவா? தகவல் அறியும் உரிமை சட்டம் அதற்குதானே கொண்டு
வரப்பட்டது என, நீதிபதிகள் கேட்டனர்.

நன்கொடை கொடுப்பவர் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்க, அவருக்கு அல்லது கம்
பெனிகளுக்கு உரிமை உண்டு என அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது. நீதிபதிகளின் கேள்விகள் துளைத்த போது, ஒரு குடிமகனின் ஓட்டு எவ்வளவு ரகசியமானதோ, அதே போன்றது தான் நன்கொடையாளர் குறித்த தகவல்களும் என, அரசின்தலைமை வழக்கறிஞர் ஒரே போடாக போட்டார். நீதிபதிகள் யாரும் அந்த பதிலில் திருப்தியாகவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது.

ஒருமித்த தீர்ப்பு

நவம்பர் மாதத்தில் வாதங்கள் முடிந்தன. தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என கோர்ட் கூறியது. அதன்படி, நேற்று தீர்ப்பு வந்தது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்; அதை
தலைமை நீதிபதி வாசித்தார். தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்துக்கும் எதிரானது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பத்திரத்துக்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கம்பெனிகள் சட்டம், வருமான வரி சட்டம் ஆகியவற்றில் செய்த திருத்தங்களும் செல்லாது என்று தீர்ப்பளித்தனர். ஸ்டேட் பாங்க் உடனடியாக, தேர்தல் பத்திரங்கள் விற்பதை நிறுத்த வேண்டும்; இதுவரை தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள், அதன் மதிப்பு, அதை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், மார்ச் 3ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்க வேண்டும்.

அதை தேர்தல் கமிஷன்தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்
பட்டுள்ளது.கட்சிகள் இதுவரை பணமாக்காத பத்திரங்களை வைத்திருந்தால், ஸ்டேட் பாங்கில் அவற்றை ஒப்படைக்க வேண்டும். நன்கொடை அளித்தவரின் வங்கிக் கணக்கில், அந்த பத்திரங்களின் விலையை ஸ்டேட் பாங்க் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மொத்தம், 232 பக்கங்கள் உள்ள தீர்ப்பில், நான்கு நீதிபதிகள் சார்பில் தலைமை நீதிபதி சந்திரசூட் வாசித்தார். மற்றொரு நீதிபதி சஞ்சிவ் கன்னா தன் தீர்ப்பை வாசித்தார்.
இரு தீர்ப்புகளும் ஒருமனதாக, தேர்தல் பத்திரம் செல்லாது என்று கூறியுள்ளன. அதில் மேலும்
கூறப்பட்டுள்ளதாவது:அரசியலில், குறிப்பாக தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை தடுப்பதற்காக தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது; அதை ஏற்க முடியாது. கருப்புப் பணத்தை தடுக்க வேறு பல வழிகள் உள்ளன.

வாக்காளர்கள் சரியான முடிவு எடுக்க வசதியாக, கட்சிகள் பெறும் நன்கொடை குறித்தும் நன்கொடை வழங்கியவர்கள் குறித்தும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதை அரசியல் சாசனத்தின் 19–1-ஏ பிரிவு உறுதி செய்கிறது. தேர்தல் பத்திரத்தில், யார் நன்கொடை அளிக்கிறார் என்ற தகவல் இடம் பெறாததால், தகவல்தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படுகிறது. அதனால், இந்த பத்திரம் செல்லாது.

கட்சிகள், 2017 முதல் 2023 வரை தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளின்படி, பா.ஜ.,வுக்கு, 6,566 கோடி, காங்கிரசுக்கு 1,123 கோடி, திரிணமுல் காங்கிரசுக்கு 1,093 கோடி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைத்துள்ளது.

ஆளுங்கட்சிக்கு சாதகம்

குறிப்பிட்ட கட்சி மீதான அபிமானத்தில் சிலர் நன்கொடை அளிக்கலாம். பிரதிபலன் எதிர்பார்த்து, சிலர் நன்கொடை அளிக்கலாம். விற்பனையான பத்திரங்களில் பெரும்பாலானவை அதிகபட்ச தொகையாக 1 கோடிக்கு உரியவை. இவ்வாறு கோடிகளில் யாரும் பிரதிபலன் எதிர்பாராமல் நன்கொடை வழங்குவது சாதாரணமாக நடப்பதில்லை. ரகசியம் காக்கப்படுவதால், இந்த தேர்தல் பத்திரம் ஆளுங்கட்சிக்கே எப்போதும் சாதகமாக இருக்கும்.

மிகப்பெரிய நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் நன்கொடை குறித்த தகவல்களை, தங்களுடைய வரவு செலவு கணக்கிலும் தெரிவிக்க வேண்டியதில்லை என்ற அரசின் நிலைப்பாடு ஏற்புடையதாக இல்லை. அப்படி பார்த்தால், கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் மாணவர்கள், தினக்
கூலிகள், ஆசிரியர் உள்ளிட்டோரை யார் பாதுகாப்பது? அரசியல் சாசனம் தான் அவர்களுக்கு பாதுகாப்பு. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளதால் தேர்தல் பத்திரம் செல்லாது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு சட்டத்தையும், ஒரு நடைமுறையையும் தவறாகப் பயன்படுத்துவதை அரசியல் சாசனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானவை’ என, உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது, வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதி செய்திடும். இந்த தீர்ப்பு, மக்களாட்சியை மீட்டிருப்பதோடு, அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது, அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது.
ஸ்டாலின், முதல்வர்..

ரூ.16,000 கோடிக்கு விற்பனை!

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக இதுவரை கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள விபரம்: மார்ச் 2018 – ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் வாயிலாக 16,518.11 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பா.ஜ., 6,565 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெற்றுள்ளது. அடுத்ததாக, காங்கிரஸ் 1,547 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

திரிணமுல் காங்., 823 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 367 கோடி ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் 231 கோடி ரூபாயும் பெற்றுள்ளன. அரசியல் கட்சிகளால் சராசரியாக பெறப்பட்ட மொத்த நன்கொடைகளில் பாதிக்கும் அதிகம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் மாநில கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 90 சதவீதத்திற்கும் அதிகமாக நன்கொடை பெற்றுள்ளன. பா.ஜ.,வை பொறுத்தவரை, அதன் மொத்த வருமானத்தில் பாதிக்கும் அதிகமான தொகையை தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெற்றுள்ளது.

கடந்த 2022 – 23ம் நிதியாண்டில், பா.ஜ.,வின் மொத்த வருமானம் 2,360 கோடி ரூபாயாக இருந்தது. இதில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டும் 1,300 கோடி ரூபாய் கிடைத்தது. அதே ஆண்டு, காங்கிரசுக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 171 கோடி ரூபாய் மட்டுமே வந்தது. திரிணமுல் காங்கிரசுக்கு 325 கோடி ரூபாயும், பாரத் ராஷ்டிர சமிதிக்கு 529 கோடி ரூபாயும், தி.மு.க.,வுக்கு 185 கோடி ரூபாயும் கிடைத்தது. பிஜு ஜனதா தளம் 152 கோடி ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 34 கோடி ரூபாயும் கிடைத்தது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக வந்த நிதியில், பாதிக்கும் மேற்பட்டவை கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கிடைத்தன. நடப்பு நிதியாண்டிற்கான கட்சி வாரியான தரவு, தணிக்கை அறிக்கை தாக்கல் செய்த பின்னரே வெளியாகும்.

காங்., வரவேற்பு!

தேர்தல் பத்திர திட்டத்தை துவங்கிய போதே, அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என, காங்., எதிர்ப்பு தெரிவித்தது. கருப்புப் பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட்டத்தை, சட்ட விரோதம் எனக் கூறி ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். எதிர் காலத்தில் இது போன்ற சிறுபிள்ளைத்தனமாக திட்டங்களை அரசு துவங்காது என, நம்புகிறோம்.

— மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்.,

தீர்ப்பை மதிக்கிறோம்!

தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காகவே, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். – ரவிசங்கர் பிரசாத்,முன்னாள் சட்ட அமைச்சர், பா.ஜ.,

கண்டுகொள்ளாத மோடி!

நாட்டை விற்க விட மாட்டேன் என கோஷம் போட்ட மோடி, தேர்தல் நன்கொடைக்காக நாட்டின் ஒவ்வொரு வளத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கத் தயாராகி விட்டார். தங்கள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்கும் விவசாயிகளை அவர் கண்டுகொள்வதில்லை. காரணம், அவர்கள் தேர்தல் நிதி அளிப்பதில்லை.- ராகுல், காங்., – எம்.பி.,

வரப்பிரசாதம்!

தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். இது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சி.- எஸ்.ஒய்.குரேஷிமுன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்

மக்களின் நலனை பாதுகாக்கும்!

இந்த தீர்ப்பு, அரசியலுக்கு அளிக்கப்படும் நிதியில், வெளிப்படைத்தன்மையை கொண்டு வர உதவும். மேலும், மக்களின் நலன்களை பாதுகாக்கும்.- ஜெயா தாக்குர்இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர், காங்.,

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, 2017 – 18க்கான மத்திய பட்ஜெட்டில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம், 2018 ஜன., 29 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின்படி, பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட்
வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், 1,000 – 10,000 – 1 லட்சம் – 10 லட்சம் – 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை, நம் நாட்டைச் சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு
அளிக்கலாம். இதில் நிதி அளிக்கும் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெறாது. தேர்தல் பத்திரம் பெற்ற கட்சிகள், 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுபாடுமின்றி, அதை பணமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அந்தப் பணம் பிரதமரின் பொது நிவாரண நிதியில் டிபாசிட் செய்யப்படும். ஒரு கட்சி தேர்தல் பத்திரம் வாயிலாக நிதி பெற வேண்டுமானால், லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில், குறைந்தது 1 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும்.

‘மக்களுக்கு தெரிய வேண்டும்’

ஆடிட்டரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான எம்.ஆர்.வெங்கடேஷ் கூறியதாவது:’தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் நடைமுறை சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை, வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகள் யாரிடம் இருந்து, எவ்வளவு நன்கொடை பெறுகின்றன என்பது, ஓட்டளிக்கும் மக்களுக்கு தெரிய வேண்டும்; அது தான் ஜனநாயகம். ஆனால், 2017 – -18ல் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை.
வங்கி காசோலை கொடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய ஒருவரிடமிருந்து, பணம் கொடுத்து வேறொருவர் வாங்கலாம். அவரிடம் இருந்து, அரசியல் கட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால், நன்கொடை கொடுத்தவர்கள், அதாவது தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியாது. ‘தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை கொடுத்தோர் குறித்த விபரங்களை, தேர்தல் ஆணைய இணையதளத்தில், ஏப்ரல் 13க்குள் வெளியிட
வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இதனால், யார் யார், எந்தெந்த கட்சிகளுக்கு, எவ்வளவு நன்கொடை கொடுத்தனர் என்பது தெரிந்து விடும். இது, ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.