Russia reports cancer vaccine is nearing final stage | புற்று நோய்க்கு விரைவில் வருகிறது தடுப்பூசி இறுதி கட்டத்தை நெருங்கியதாக ரஷ்யா தகவல்

மாஸ்கோ :”ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்,” எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார்.

புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரசுக்கு எதிரான, உரிமம் பெற்ற ஆறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

ஆராய்ச்சி

இவை தவிர, குடல் புற்று நோயை ஏற்படுத்தும் ‘ஹெபடைட்டிஸ் பி’ வைரசுக்கு எதிரான தடுப்பூசி உள்ளது.

மேலும் சில தனியார் மருந்து நிறுவனங்கள், ‘மெலனோமா’ எனப்படும் உயிர் பறிக்கும் தோல் புற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பாதி கட்டத்தை தாண்டியுள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவில் நேற்று நடந்த எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான மாஸ்கோ மன்றத்தில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்று பேசினார்.

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கான தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக கூறினார். ஆனால், எந்த வகை புற்று நோய்களுக்கான தடுப்பூசி என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இறுதிக் கட்டம்

இந்த நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது:

புதிய தலைமுறைக்கான புற்று நோய் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றி அமைக்கும் மருந்துகளை உருவாக்கும் பணிகளில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.

இந்த தடுப்பூசி, கூடிய விரைவில் தனிநபர்களின் சிகிச்சை பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பைடனை விரும்பும் புடின்!

ரஷ்யாவின் பார்வையில் அமெரிக்க அதிபராக யார் வருவது சிறப்பு என்ற கேள்விக்கு, ரஷ்ய அதிபர் புடின் அளித்த பதில்: அமெரிக்க அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார். பழைய அரசியல் நடைமுறைகளை பின்பற்றும் பைடன் மிகவும் அனுபவம் வாய்ந்தவர், யூகிக்க முடிபவர். அவரது உடல்நலம் பற்றி கருத்து கூற நான் டாக்டர் இல்லை. அது சரியாகவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.