இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் அறிமுக வீரரான சர்ஃபராஸ் கான் ரன் அவுட் ஆகியிருக்கும் விதம் சர்ச்சையாகியிருக்கிறது.
சர்ஃபராஸை ஜடேஜா வேண்டுமென்றே ரன் அவுட் ஆக்கிவிட்டதாக இணையத்தில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். என்ன நடந்தது?
இந்திய அணிதான் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. சர்ஃபராஸ் கானும் துருவ் ஜோரைலும் அறிமுக வீரர்களாக களமிறங்கியிருந்தனர். ஆரம்பத்தில் இந்திய அணி கொஞ்சம் சறுக்கியிருந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் அசத்தலான சதத்தால் இந்திய அணி மீண்டெழுந்தது. ரோஹித் சர்மா 131 ரன்களில் மார்க்வுட்டின் பந்தில் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். அறிமுக வீரரான சர்ஃபராஸ் கான் நம்பர் 4 வீரராக களத்திற்குள் வந்தார். ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். வெறும் 48 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அதிரடியாக ஆடியிருந்தார். இந்நிலையில்தான் ஆண்டர்சன் 82 வது ஓவரை வீசியிருந்தார். இந்த ஓவரின் 5 வது பந்தில் ஜடேஜா 99 ரன்களில் இருந்தார். ஜடேஜா சதத்துக்கு முயல்வார் என்பதால் ஃபீல்ட் ரொம்பபே டைட்டாக வைக்கப்பட்டிருந்தது. சில்லி மிட் ஆன் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. அப்படியிருக்க ஜடேஜா நன்றாக முன்னே தள்ளி நின்ற மிட் ஆன் ஃபீல்டரிடம் பந்தை தட்டி விட்டு ரன் ஓட முயன்றார். மார்க் வுட் வேகமாக பந்தை கலெக்ட் செய்துவிட ஜடேஜா பின்வாங்கிவிட்டார். ஜடேஜாவின் பேச்சை கேட்டு ஓடத் தொடங்கிய சர்ஃபராஸ் கான் மார்க் வுட்டாக் டைரக்ட் ஹிட்டாக அவுட் செய்யப்பட்டார். 62 ரன்களில் சர்ஃபராஸ் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
‘ஜடேஜா முதலில் ‘Yes’ எனச் சொல்லி ரன்னுக்கு அழைத்தார். பின் ‘No’ எனக்கூறி மறுத்துவிட்டார். Poor…சர்ஃபராஸ் தன் பார்ட்னரின் 100 வது ரன்னுக்கு ஓட முயன்று தன் விக்கெட்டை தாரை வார்த்துக்கிறார். சர்ஃபராஸ் கொஞ்சம் கூடுதலாக சிரத்தை எடுத்துவிட்டார்.’
என கமெண்டரியில் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்திருந்தார். சர்ஃபராஸின் ரன் அவுட்டை பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபத்த தொப்பியைக் கழற்றி வீசி எறிந்தார். ரன் அவுட்டால் அதிருப்தியடைந்த சர்ஃபராஸ் பெவிலியனில் ஒரு மூலையில் சோகத்தோடு அமர்ந்திருந்தார்.
இணையத்திலும் ரசிகர்கள் ஜடேஜா தன்னுடைய தனிப்பட்ட சாதனைக்காக இளம் வீரர் ஒருவரின் விக்கெட்டை அநியாயமாக தாரை வார்த்துவிட்டார் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜடேஜா, ‘சர்ஃபராஸ் கானுக்காக வருந்துகிறேன். நான் தான் தவறாக ரன்னுக்கு அழைத்துவிட்டேன். நீங்கள் நன்றாக ஆடினீர்கள்.’ என சர்ஃபராஸை டேக் செய்து ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.