அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற் கட்டம் ஜனாதிபதியால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

  • மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
  • வட. மத்திய மாகாணத்தை வலுசக்தி மையமாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
  • 1917 ரஷ்யப் புரட்சியில் லெனின் கம்யூனிசம் பற்றி பேசவில்லை.

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்டாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

அந்த வேலைத்திட்டத்தினால் விவசாய தேவைகளுக்கும், குடிநீர் தேவைகளுக்கும் தீர்வு கிடைக்குமெனவும் தெரிவித்த ஜனாதிபதி அதுகுறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவுறுத்தினார்.

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டத்தை நேற்று (15) முற்பகல் மக்கள் பாவனைக்காக கையளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் அவதியுறும் மதவச்சி, பதவிய, கெபித்திகொல்லேவ, ஹொரோவபொத்தான, கஹட்டகஸ்திகிலிய பிரதேச மக்களுக்கு தூய குடிநீர் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 11,515 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டம், அனுராதபுரம் மஹா கனதராவ குளத்தை பிரதான நீராதாரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் கீழ் ரம்பேவ மற்றும் மதவச்சி பிரதேச செயலகப் பிரிவுகளின் 75 கிராம சேவைப் பிரிவுகளின் 25,000 குடும்பங்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இவ்விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வடமத்திய மாகாணத்தை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்காகவோ எதிர்கட்சிக்காகவோ அன்றி மக்களின் சுபீட்சமான வாழ்விற்காக ஒன்றிணையுமாறு மீண்டும் அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

“இந்தப் பிரதேசங்களுக்கு நீர் வழங்குவதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். நாட்டில் இன்னும் அதிகமான வீடுகளுக்கு நீர் வழங்கப்பட வேண்டியுள்ளது. மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும்.

இப்பிரதேசங்களில் இன்று ஏற்பட்டுள்ள அபிவிருத்தி மலையகத்தில் இல்லை. அந்தப் பிரச்சினைகளுக்கு நாம் விரைவில் தீர்வு காண வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இப்போது முன்னெடுத்து வருகிறார்.

அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் 2013 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மறுபுறம், விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் போது விவசாயத்திற்கு தேவையான நீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற சந்தேகம் சிலரிடையே எழுந்துள்ளது. ஆனால் அவ்வாறு நடக்காது. அது தொடர்பில் நாம் உரிய வகையில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு நீர் அவசியப்படும். வீடுகளுக்கும் குடிநீர் தேவை உள்ளது. எனவே இத்திட்டம், விவசாயத் தேவை , குடிநீர் தேவை உள்ளிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தருமென உறுதியளிக்கிறேன்.

பொருளாதார நெருக்கடியால் கடந்த காலங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாமலிருந்தது.

எப்படியாவது இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியைக் கொடுத்து இந்தப் பணியை நிறைவு செய்ய முடிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது பெரும் சிக்கலாக இருந்தது.

2022 ஆம் ஆண்டில் நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வராத காரணத்தினால் நான் பொறுப்பேற்றுக்கொண்டதை அனைவரும் அறிந்திருப்பார்கள். அதன் பிறகு பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்னெடுத்தோம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் நாம் இந்த திட்டத்தையும் ஆரம்பித்தோம்.

அன்று அதிகமானவர்கள் எங்களுடன் இருக்கவில்லை. சிலர் பாராளுமன்றத்தை கலைக்கச் சொன்னார்கள்.

அப்போது விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இல்லை. எரிபொருள் இல்லை. இவ்வாறான நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது, முதலில் இப்பிரச்சினைகளைத் தீர்த்து உரிய காலத்தில் தேர்தலை நடத்த விரும்பினோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இதுவரை பல பணிகளைச் செய்துள்ளோம். ஆனால் நாம் இன்னும் கடன் சுமையில் இருந்து விடுபடவில்லை. கடன் தொடர்பில் ஓரளவு சலுகை கிடைத்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்த மேலும் 20 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவான பொருளாதார மாற்றத்தை நாம் ஏற்படுத்தாவிட்டால், அந்த கடன்களை செலுத்த மேலும் அதிகளவான கடன்களைப் பெற வேண்டியிருக்கும்.

நாம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது மக்களுக்குத் தேவையான உணவு இருக்கவில்லை. எரிபொருள் இல்லை.

இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதே முதலில் செய்ய வேண்டிய விடயம். யுத்த காலங்களில், அரசாங்கங்கள் வீழ்ச்சியடையும் போது, எந்தவொரு அரசாங்கமும் முதலில் செய்ய வேண்டியது இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும்.

அந்த அடிப்படைத் தேவைகளை 1917 ரஷ்யப் புரட்சியில் லெனின் என்னை விட சிறப்பாக வெளிப்படுத்தினார். அப்போது அவர் கம்யூனிசம் பற்றி பேசவில்லை. Peace, Land, Bread என்று மாத்திரமே அறிவிக்கப்பட்டது. வேறு எதுவும் கூறவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகே கம்யூனிசம் உருவாக்கப்பட்டது.

நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கே நாம் முதலில் நடவடிக்கை எடுத்தோம். இன்று நாட்டில் ஸ்திரத்தன்மை உள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்பட்டுள்ளது. அரசை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பேரணிகளை நடத்தலாம். அந்த ஸ்திரத்தன்மை இன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, மக்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்காக நெல் பயிரிட அமெரிக்காவிலிருந்து உரம் வழங்கப்பட்டது. 2022, 2023 பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் இருந்து எமக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. மக்களுக்கு அரிசி, மா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினோம்.

மூன்றாவது இருந்தது காணி வழங்குவதாகும். அதற்காக உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். அத்துடன் கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த மக்களுக்கு வழங்குவதற்குத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் நல்லதொரு பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும். அதனால் நீர் முகாமைத்துவமும் சிறப்பாக இடம்பெறும். சிறந்த பயிர்களும் அறியப்படும். அரசாட்சி காலத்திலும் மக்களின் உணவுத் தேவைக்காக மாத்திரம் நெல் உற்பத்தி செய்யப்படவில்லை. கிழக்கின் களஞ்சியமாக இங்கிருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. அவ்வாறெனில் இன்று நம்மால் ஏன் அந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் உள்ளது? அந்த வேலைத்திட்டத்தை நாம் முன்பே ஆரம்பித்திருந்தால் இன்று நாம் யாசகம் கோரும் தேசமாகியிருக்கமாட்டோம்.

புதிய தொழிற்சாலைகளை நாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுற்றுலா வர்தகம் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். உணவு வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. எமது இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இன்னும் 5 – 6 வருடங்கள் நாம் இவ்வாறு காத்திருக்க முடியாது. நாம் விரையில் அந்நிய செலாவணியை ஈட்டிக்கொண்டு அதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார மாற்றத்துக்கான செயற்பாடுகளுக்கான புதிய சட்டத்தை கெண்டு வர நாம் எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

தேர்தல் காலத்தில் நாம் தனிப்பட்ட அரசியல் செயற்பாடுகளை வெவ்வேறாக முன்னெடுப்போம். தேர்தலின் பின்னர் ஒற்றுமையாகச் செயற்படுவோம். அவ்வாறான முறைமையிலேயே நாம் செயற்பட வேண்டும். நாம் பிரிந்திருந்தால் கிராம மக்களுக்கு எந்த நலனும் கிடைக்காது. இன்றும் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம் என்றே கூறுகிறேன். அரசாங்கத்திற்காகவும் எதிர்கட்சிக்காகவும் ஒன்றுபடுங்கள் என்று கூறவில்லை. மக்களுக்காக ஒன்றுபடுவோம் என்றே அழைக்கிறேன். அனைவரும் ஒன்றுபடுவதால் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

வட. மத்திய மாகாணத்திற்கு நீர் விநியோகிப்பதற்கான இந்த வேலைத்திட்டம் சிறப்பானது. அதேபோல் மல்வத்து ஓயா வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த நீர் வழங்கல் திட்டத்தை போன்றே வட.மத்திய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். இந்த பகுதியில் அனல் சக்தி உள்ளது. அதேபோல் வடக்கில் காற்று சக்தி உள்ளது. அதனால் இந்த மாகாணத்தில் பாரிய மீள்புதுப்பிக்கதக்க வலுசக்தி நிலையமொன்றை நிறுவ முடியும். அதேபோல் குளங்களுக்கு அருகில் மின் நிலையங்களை உருவாக்குதல் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகிறோம். இதனால் பெரும் பொருளாதார வலுவை பெற்றுக்கொள்ளும் இயலுமை எமக்கு உள்ளது. நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி நல்லதொரு எதிர்காலத்தை கட்டமைக்க முன்வாருங்கள்.” என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்
நான் இந்த அமைச்சை பொறுப்பேற்ற போது 10000 நீர் இணைப்புக்களை கூட வழங்க முடியாதென்ற கருத்து சமூகத்தின் மத்தியில் இருந்தது. கடந்த வருடத்தில் மாத்திரம் 103,000 நீர் இணைப்புக்களை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இவ்வருட இறுதியில் அதனை இரண்டு இலட்சமாக அதிகரிக்க முடியுமென எதிர்பார்க்கிறோம். எமது நாட்டில் 60% மக்களுக்கு தூய குடிநீர் கிடைக்கிறது. நீர் கட்டணங்களை மக்களுக்கு சுமையில்லா வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

தோட்ட மக்களின் போஷாக்கு மற்றும் காணிப் பிரச்சினைகள் தற்போதும் உள்ளன. உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் தோட்ட மக்களின் காணி உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக 25000 குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இப்பகுதியிலிருக்கும் சிறுநீரக நோயாளர்களுக்கு இந்த குடிநீர் திட்டம் நிவாரணமாக அமைந்திருக்கும்.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக கெபதிகொல்லாவ, ஹொரவபொத்தானை, பதவிய, கஹடகஸ்தெலிய பகுதிகளில் வசிக்கும் 55,000 குடும்பங்களுக்கு குடிநீரை பெற்றுகொடுக்க எதிர்பார்க்கிறோம்.

இன்று நெல் பயிர்ச்செய்கைப் போகங்கள் தொடர்பிலான கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால், வேறு கட்சிகளால் விவசாயிகள் மத்தியில் விவசாயம் தொடர்பிலான அநாவசியமாக அச்சம் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கு நாம் இடமளியோம் என தெரிவித்தார்.

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ,

இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியை சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்த முடியும். அமைச்சின் எதிர்கால தரவுகளில் அதனை அறிய முடியும். தூய குடிநீர் இன்மையே இப்பகுதியின் சிறுநீரக நோய் அதிகரிப்புக்கு முதன்மை காரணமாக இருக்கிறது. இங்குள்ள மக்களில் ஒரு பகுதியினருக்கு இன்று தூய குடிநீரை வழங்க முடிந்துள்ளது. இதன் இரண்டாம் கட்டத்தில் மற்றுமொரு தொகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

மஹாகனதராவ குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு இந்த வேலைத்திட்டங்களினால் எவ்வித பாதிப்புக்களும் வராது. இங்கு குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது குளத்தின் கொள்ளளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படாது. அது பற்றிய அநாவசியமாக அச்சங்கள் அவசியமில்லை. இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் முன்பாக நீர்வழங்கல் சபை, நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் ஒரே களத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இந்த திட்டம் உங்களுக்கானது. இதனால் உங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் வரப்போவதில்லை.

இந்த திட்டம் தொடர்பாக எந்த பிரச்சனையும் எழவில்லை. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, கடந்த வாரம் நீர் வழங்கல் சபையின் தலைவர், முகாமையாளர், இம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறியியலாளர்கள், செயற்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள், அமைச்சின் செயலாளர் முதல் அனைவரையும் அழைப்பித்தோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் முதல் பணிப்பாளர் வரையான அனைவரிடத்திலும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம்.

ஒரு தொகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, அதனை முகாமைத்துவம் செய்து மக்களுக்கு சரியானவற்றை பெற்றுகொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அதற்கான பேச்சுவார்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. எவருக்கும் பாதிப்பின்றி செயற்பட வேண்டுமென இணக்கம் எட்டப்பட்டது. இதனால் இந்த மஹாகனதராவ குளத்தில் பயனடையும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படக்கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.

இந்தத் திட்டத்தைத் ஆரம்பிக்கும்போது, குளத்தின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். அதிலிருந்து இப்பகுதி மக்களுக்கு தூய குடிநீரை வழங்கவுள்ளோம். சில நேரங்களில், இரண்டு போகங்களிலிலும் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நேரத்திலும், மேலதிக விளைச்சலை மேற்கொள்ள முடியாத வேளையிலும் நீர் குறைவடையும் நேரத்திலும் மக்கள் அதிருப்தி அடைவர்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒரு பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் கீழ் மஹாகனதராவ குளத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு தடவைகளாவது பேர வாவிகள் வாயிலாக நீர் கொண்டுச் செல்லப்படும் வகையில் விஸ்தரிப்புச் செய்யப்படுகிறது. தற்போது அதற்கான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் குறைப்பாடுகளை நிவர்த்திப்பதற்கான நிதியும் கிடைத்துள்ளது.

இந்த திட்டம் வெற்றியடைய வேண்டுமெனில் விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படக்கூடாது என்பதையும் நான் வலியுறுத்துகிறேன். இரு தரப்புக்கும் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இந்த திட்டத்தின் வாயிலாக தனிப்பட்ட வகையில் அரசியல் இலாபம் தேட முற்படுவதால் இப்பகுதி மக்களுக்கு மாத்திரமின்றி நாட்டு மக்களுக்கும் தவறு இழைக்கப்படும். வௌளிப்படைத் தன்மையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எந்த அளவான நீர் பெறப்பட்டுள்ளது என்பதை நேரில் பார்ப்பதற்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்படும். நீர் வழங்கல் சபை, நீர்ப்பாசன திணைக்களம், விவசாய அமைப்புக்கள் இது தொடர்பிலான இணக்கப்பாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைசாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு தரப்புக்கும் பாதிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் டனகா அகிஹிகோ,

இந்த குடிநீர் திட்டத்திற்காக 5,166 மில்லியன் நிதி உதவியை ஜப்பான் வழங்கியுள்ளது. இதனால் ரம்பேவ, மதவச்சியில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு பலன் கிடைக்கும். இந்த வேலைத்திட்டத்தை திறந்து வைக்கின்றமை மகிழ்சிக்குரியதாகும்.

அதேபோல் அனுராதபுரம் என்ற வரலாற்று நகரத்தை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இப்பகுதி மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுகொடுப்பதற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அர்பணித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேயகி, வட. மத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, இஷாக் ரஹுமான், எச்.நந்தசேன, வட. மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எஸ்.எம்.ரஞ்சித், முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், ஜப்பான் சர்வதே ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் டனகா அகிஹிகோ, அதன் இலங்கைக்கான தலைமை பிரதிநிதி யமடா டெடிசுயா, தேசிய நீர் வழங்கல் சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.