இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து

  • கொள்கலன் கப்பல் போக்குவரத்து 32% அதிகரித்துள்ளது -அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா.

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் நேற்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

கொள்கலன் கப்பல் போக்குவரத்து சுமார் 32% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கும் இடையே கைசாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

அத்துடன் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போதுள்ள சேவை உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் ஏற்படும் தாமதத்தை தடுப்பது, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் எம்மிடம் குறிப்பிட்டார்.

அத்துடன், பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ (Indigo Airlines) விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி, டெண்டர் சபை ஒரு முதலீட்டாளரை தெரிவு செய்துள்ளது.

குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம். அதன் மூலம் அந்த விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும். இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், 31 பயணச்சீட்டு கருபீடங்கள் மற்றும் புதிய முனையக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 06 பில்லியன் ரூபாயாகும். அதன் பிரகாரம் அடுத்த இரண்டு வாரங்களில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு 09 மாதங்களுக்குள் தீர்வு காண முடியும்.

அத்துடன், ஜப்பான் JICA நிறுவனத்தின் தலைவர் (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலில் இரண்டாவது முனையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்புக்கான முதலீட்டு விருப்பங்களைத் தெரிவிக்கும் காலம் மார்ச் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொள்கலன் கப்பல் போக்குவரத்து சுமார் 32% வளர்ச்சி கண்டுள்ளது. அதிகரித்து வரும் கொள்ளளவுக்கு ஏற்ப துறைமுகத்தை விரிவுபடுத்தும் வகையில், துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான நிதியில் 580 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அதன்படி, ECT முனையம் மூலம் அதிக அளவிலான கொள்கலன்களை பரிமாற்ற முடியும், இதன் மூலம் எமது நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.