கடந்த மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், தேனியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றிபெற்றார். இந்த முறை பாஜக கூட்டணியில் ரவீந்திரநாத்தை தேனியில் களம் இறக்கத் திட்டமிட்டு தற்போதே அந்தத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். பாஜக கூட்டணியில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவுடன் ரவீந்திரநாத்தை வெற்றிபெறச் செய்துவிடலாம் என்று ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ரவீந்திரநாத்தை வீழ்த்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான ஒரு தேர்தல் பணிக் குழுவை அதிமுகவில் பழனிசாமி நியமித்துள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த முறை ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக தேர்தல் பணிக்குழு தேனியில் முகாமிட்டு ரவீந்திரநாத்தை வெற்றிபெறச் செய்தது. இந்த முறை தேனியில் ரவீந்திரநாத் போட்டியிடும்பட்சத்தில், அவரை தோற்கடிக்கும் பொறுப்பை ஆர்.பி.உதயகுமாரிடம் பழனிசாமி வழங்கியுள்ளார்.
மேலும், ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரனை தேனி வேட்பாளராக நிறுத்த பழனிசாமி ஒப்புதல் கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ரவீந்திரநாத்தை தேர்தலில் வெல்வதன் மூலம், தங்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் ஓபிஎஸ்ஸை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்றனர்.