கடைசி நேர இழுபறிக்குப் பின் வெளியான சந்தீப் கிஷன் படம்
நடிகர் சந்தீப் கிஷன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷுடன் அவர் இணைந்து நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தற்போது தெலுங்கில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள ஊரு பேரு பைரவகோனா என்கிற படம் இன்று வெளியாகி உள்ளது. வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை விஐ ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் ஏற்கனவே ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு சில காரணங்களால் பிப்ரவரி-16க்கு (இன்று) ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வைசாக் சதீஷ் என்பவர் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடம் 30 கோடி பெற்றுக்கொண்டு அவர்களது படங்களின் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச வெளியீட்டு உரிமைகளை தனக்கு 5 வருடங்களுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து இருந்தனர் என்றும், ஆனால் இதற்கு முன்னதாக அவர்கள் தயாரிப்பில் வெளியான ஏஜென்ட் திரைப்படத்திற்கு தனக்கு விசாகப்பட்டினம் உரிமையை மட்டுமே வழங்கினார்கள் என்றும், அதனால் அவர்கள் செய்த ஒப்பந்தத்தை மீறியதால் தனக்கு மிகப் பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அதை ஈடு செய்யும் வரை ஊரு பேரு பைரவகோனா படத்தின் ரிலீஸை நிறுத்தி வைக்குமாறு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 12ஆம் தேதி இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது. படத்தின் ரிலீஸுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் இப்படி திடீரென ஏற்பட்ட தடையை கண்டு அதிர்ந்து போன தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் வைசாக் சதீஷுடன் சமரச பேச்சு நடத்தியதை தொடர்ந்து இந்த படம் பிரச்சனை இன்றி வெளியாகி உள்ளது.