ஒன்றாக கருணைக்கொலை (Euthanasia) செய்யப்பட்ட தம்பதி!
நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் திரீஸ் வான்ஹாட், அவரின் மனைவி யூஜெனி இருவரும் ஒன்றாகக் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். திரீஸ் வான்ஹாட்டுக்கு வயது 93. இவர் 1977 முதல் 1982 வரை நெதர்லாந்தின் பிரதமராகவும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார்.
திரீஸ் வான்ஹாட் மற்றும் அவரின் மனைவி யூஜெனி ஆகிய இருவரும் பிப்ரவரி 5-ம் தேதி தங்களின் சொந்த ஊரான நிஜ்மேகனில், ஒன்றாக கருணைக்கொலை செய்யப்பட்டனர் என ‘தி ரைட்ஸ் ஃபோரம்’ என்கிற மனித உரிமைகள் அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ’திரீஸ் வான்ஹாட் மற்றும் அவரின் மனைவி யூஜெனி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தீராத நோயினால் அவதியுற்றனர். முதுமையும் மற்றொருபுறம் அவர்களை பாதித்தது. இந்நிலையில், திரீஸ் வான்ஹாட்டுக்கு 2019-ம் ஆண்டு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து அவர் பூரண குணமடையவில்லை. அடிக்கடி தலை சார்ந்த பிரச்னைகள் தொடர்ந்துள்ளன.
அவரின் மனைவியின் உடல்நிலையும் முதுமையின் காரணமாக மிகவும் நலிவுற்று மோசமான நிலையை அடைந்ததால், தங்களைக் கருணைக் கொலை செய்துவிடும்படி இந்தத் தம்பதி அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து தம்பதியின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு அரசாங்கம் அவர்கள் இருவருக்கும் விஷ ஊசி செலுத்தி கருணைக்கொலை செய்துள்ளது.
70 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்களுடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்தனர். இறக்கும்போதும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்தபடியே, இருவரும் கைகளைப் பிணைத்தபடியே மரணித்துள்ளது பலரையும் உருக்கமடையச் செய்துள்ளது.
நெதர்லாந்தில் 2002-ம் ஆண்டு முதல் கருணைக் கொலை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு 13 பேரும், 2021-ம் ஆண்டு 16 பேரும், 2022-ம் ஆண்டு 29 பேரும், கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மனித வள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.