இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாறவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்காக அறிமுகமானார். ரோகித் சர்மா அவுட்டான பிறகு மைதானத்துக்குள் வந்த அவர் அதிரடியாக விளையாடினார். 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ஜடேஜா 99 ரன்களில் ஸ்டிரைக்கில் நின்று கொண்டிருந்தார். ஒரு ரன் எடுத்தால் சதமடிக்கலாம் என இருந்த நிலையில், ஜடேஜா மறுமுனையில் இருந்த சர்பிராஸ்கானை தவறான ரன்னுக்கு திடீரென அழைத்தார்.
அந்த ரன்னுக்கு ஓடியிருந்தால் ஜடேஜா 99 ரன்களில் அவுட்டாகியிருக்க கூடும். ஆனால் அவர் பாதி தூரம் ஓடி வந்துவிட்டு திரும்ப சென்றுவிட்டார். வேகமாக ஓடி சென்ற சர்பிராஸ்கானுக்கு இது அதிர்ச்சியாக இருந்ததுடன், உடனடியாக திரும்ப வர முடியவில்லை. அதற்கு இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் கச்சிதமாக துரோ அடித்து சர்ஃபராஸ் கானை ரன்அவுட் செய்துவிட்டார். இதனை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் சர்பிராஸ்கான் தவறு என்று இதில் ஏதும் இல்லை. ஜடேஜாவும் தன்னுடைய தவறை உணர்ந்து 100 ரன்கள் அடித்ததும் அதனை கொண்டாடவில்லை.
பின்னர் போட்டி முடிந்த உடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும் கூறினார். இருப்பினும் சர்பிராஸ்கான் ஒருவித விரக்தியுடனேயே பெவிலியனில் அமர்ந்து கொண்டிருந்தார். முதல்நாள் ஆட்டம் முடிந்த பிறகு சர்ஃபராஸ் கான் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “போட்டியின்போது இப்படி நடப்பது சகஜமான ஒன்றுதான். இப்படி தவறான புரிதலால் அவுட் ஆகி செல்வதும் விளையாட்டின் ஒரு பகுதி தான். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் போட்டி முடிந்ததும் சற்று தவறான புரிதலால் ரன் அவுட்டானதாக அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்” என்று கூறினார்.