சென்னை: தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் கட்சிகள் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இத்தீர்ப்பை வரவேற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதிசெய்யும். இந்தத் தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதுடன், அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தேர்தல் பத்திரம் மூலம்நிதி பெறாத கட்சி அதிமுக மட்டும்தான். தேர்தல் நிதி பத்திரம் போன்றவற்றை தடுத்தால்தான் எங்களைப் போன்றவர்கள் கட்சி நடத்த முடியும். இவர்கள் கொள்ளையடிப்பது மட்டுமின்றி, பத்திரம் மூலமாகவும் நிதியைத் திரட்டி எங்களைப் போன்றவர்களை ஒடுக்குகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் 2018 முதல் 2022 வரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ.9,208 கோடி. இதில் பாஜக மட்டுமே ரூ.5,270 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. இத்தகைய சமநிலையற்ற தன்மையின் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை மனதார வரவேற்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும்.
விசிக தலைவர் திருமாவளவன்: தேர்தல் பத்திரத் திட்டம் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் எந்தஅரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை தெரியவரும். இவ்வழக்கில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி, அடுத்து வரும் பொதுத்தேர்தலில் அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டமாகும்.
திக தலைவர் கி.வீரமணி: தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், பாஜகவின் தேர்தல் வெற்றி, வித்தைகளின் ரகசியம் வெளிச்சத்துக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு ஒருமனதாக வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக விளங்கும். நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. மேலும் மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு என்றும் பெருமை கொள்கிறோம். தேர்தல் நேரத்தில் வந்துள்ள இத்தீர்ப்பு, ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை கொண்ட பாஜகவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி.
தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை: உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைவழங்கியுள்ளது. மக்களின் வரிப்பணம் எந்தெந்த தொழிற்சாலைகளின் கடன் தள்ளுபடிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்கிற உண்மை வெளியே வரப் போகிறது. இந்த சிறப்புமிக்க தீர்ப்பை மனதார வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.