மகளிர் பெட்டியில் பயணம் செய்யும் ஆண்கள்… மெட்ரோ ரயிலில் `Pink Squad' அறிமுகம்!

Pink Squad: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கியது முதல் பெண்கள் பயணிப்பதற்கு தனி பெட்டி உள்ளது. இந்நிலையில், பெண்களின் கூடுதல் பாதுகாப்புக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிதாக ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்காக பெண் பாதுகாவலாளர்கள் அடங்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ (Pink Squad) என்ற குழுவைத் தொடங்கியுள்ளது.

Metro Rail

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு. அ. சித்திக், செய்தியாளர்களிடம் கூறியது: “சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக ‘பிங்க் ஸ்குவாட்’ என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது.

மகளிர் பெட்டியில் ஆண்கள்…

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் அவர்கள் பாதுகாப்பு தொடர்பாக விவரங்கள் கேட்கப்பட்டது. அப்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை வேண்டும் என்று கூறியிருந்தனர். கூட்ட நெரிசல் நேரங்களில் பெண்களுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், மெட்ரோ ரயிலில் இருக்கக்கூடிய பொது பெட்டிகளைத் தவிர்த்து சில ஆண்கள், மகளிர் பெட்டிகளில் பயணம் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.

பிங்க் ஸ்குவாட் I Pink Squad

23 பெண் பாதுகாவலர்கள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிராக நிகழக்கூடிய ஈவ் டீசிங் மற்றும் பிற குற்றங்களைத் தவிர்ப்பதற்காக இந்தக் குழுவை நியமித்துள்ளோம். இதில் 23 பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய ரயில் நிலையங்களான புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் சென்னை விமான நிலையம் மெட்ரோ ஆகியவற்றில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பிரத்யேக தொடர்பு எண்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் இவர்களைத் தொடர்புகொள்ளலாம். தற்காலிகமாக சி.எம். ஆர். எல் உதவி எண்ணை (1860 425 1515) தொடர்பு கொள்ளலாம். கூடிய விரைவில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து மகளிர் உதவிக்காக பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்த உள்ளோம்.

மெட்ரோ

இந்த 23 பெண் பாதுகாவலர்களும் தற்காப்பு கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தவிர, வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றிலும் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர். பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.