சண்டிகர்: பல்வேறு விவசாய அமைப்புகள் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (பிப்.15) நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், தங்களது போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று நாடு தழுவிய அளவில் ‘பாரத் பந்த்’ போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8 மற்றும் 12-ம் தேதிகளில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவினரும் நேற்று மாலை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் சார்பில் வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். அதிகாலை வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இந்த சூழலில் போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளது.
அர்ஜுன் முண்டா கருத்து: “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டோம். அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக சுமூக தீர்வு காணப்படும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்” என தெரிவித்தார்.
விவசாய பிரதிநிதி: பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் அமைதியான வழியில் எங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம். அதை தவிர வேறேதும் எங்களால் செய்ய முடியாது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சாதகமான வகையில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தெரிவித்தார். அறவழியில் போராடும் சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தானியர்கள் போல அரசு கையாள்வதாக தங்களது ஆதங்கத்தை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.