மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டு அதிபர் புடினின் எதிர்ப்பாளருமான அலெக்சி நாவல்னி, சிறையில் நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி வந்தார். இவரது வசீகரமான பேச்சுக்கும், முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ரஷ்ய இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. ஆனால், அலெக்சி நாவல்னி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கடந்த 2021 ல் ரஷ்ய அரசு சிறையில் அடைத்தது. 19 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்க்டிக் சிறையில் அலெக்சி நாவல்னி அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், சிறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அலெக்சி நாவல்னி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சுயநினைவின்றி மயங்கிய அவரை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவு முயற்சித்தும் பலனளிக்கவில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே விஷம்
முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலெக்சி நாவல்னி, திடீரென மயங்கி விழுந்தார். அவரது உடம்பில், கொடிய விஷம் செலுத்தப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஐரோப்பிய நாடான, ஜெர்மனியில் உள்ள மருந்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஐந்து மாதங்கள் சிகிச்சை முடிந்து, ரஷ்யா திரும்பிய போது, அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement