இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஓப்பனரான சக் க்ராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டியிருக்கிறார்.
இந்தியா சார்பில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு 500 விக்கெட்டுகளை எடுக்கும் இரண்டாவது பௌலர் எனும் சாதனையையும் அஷ்வின் படைத்திருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு அஷ்வின் தனது சாதனை குறித்துப் பேசியிருந்தார். அதில், தனது தந்தை குறித்தும் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
அஷ்வின் பேசியிருப்பதாவது, “இது ஒரு நீண்ட நெடிய பயணம். இந்தச் சாதனையை என்னுடைய அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். என்னுடைய வளர்ச்சி, சறுக்கல் என அத்தனை சமயங்களிலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார்.
ஒவ்வொரு முறை நான் விளையாடுவதை பார்க்கையிலும் அவருக்கு நெஞ்சு வலியே வந்துவிடும். என் ஆட்டத்தைப் பார்த்து அவரது உடல் நிலையே கொஞ்சம் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும்.”
ஒவ்வொரு முறை அஷ்வின் கிரிக்கெட் ஆடும்போதும் மிக தீவிரமாக அதை தொலைக்காட்சியில் பார்ப்பது அவரின் தந்தையின் வழக்கம். அதைத்தான் இப்படி நகைச்சுவையாக அஷ்வின் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து இங்கிலாந்து அணியின் செயல்பாடு குறித்துப் பேசிய அஷ்வின், “இங்கிலாந்து வீரர்கள் தீவிர முனைப்போடு ஆடி வருகிறார்கள். இந்தப் போட்டியை ஒரு ஓடிஐ, டி20 போட்டியை போல அணுகுகிறார்கள். எங்களை அதிகமாக சிந்திக்க வைக்கிறார்கள். நாங்கள் எங்கள் கையில் வைத்திருக்கும் திட்டத்தில் உறுதியாக இருந்து அதையே தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த விரும்புகிறோம். இந்தத் தொடரில் முதல் மூன்று நாள்களுக்கு பிட்ச்கள் பேட்டருக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது.
5வது நாளில் பிட்ச் கடினமாக மாறும். இங்கிலாந்து வீரர்கள் எங்கள் மீது அழுத்தம் ஏற்றியிருக்கிறார்கள். நாங்கள் ஒழுங்காக சீராகப் பந்துவீச வேண்டும். ஆட்டம் இப்போதைக்கு சமநிலையில்தான் இருக்கிறது. பக்குவமாகச் செயல்பட்டு ஆட்டத்தைக் கையிலிருந்து விலகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” எனப் பேசியிருக்கிறார் அஷ்வின்.