புதுடில்லி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனிடையே, விவசாய சங்கத்தினர் நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ‘டில்லி சலோ’ எனப்படும் டில்லியை நோக்கி பேரணி என்ற பெயரில், பல விவசாய சங்கத்தினர் தங்கள் பயணத்தை பிப்.,13ல் துவக்கினர்.
போராட்டத்தை கைவிடுவதற்கு மத்திய அரசு நடத்திய பேச்சில் முடிவு ஏற்படவில்லை. சண்டிகர், டில்லியை நோக்கி பேரணி நடத்த முயன்றள்ள விவசாய சங்கத்தினர், பஞ்சாப் — ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கலைந்து போகச் செய்ய, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன், விவசாயிகள் மோதலில் ஈடுபட்டனர். இதில் சிலர் காயமடைந்தனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாய சங்கத்துடன் நேற்று விவசாய சங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்றும் பேச்சுவார்த்தையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய ‛பாரத் பந்த்’திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை விவசாய பணிகளை நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபடும்படி சங்கங்கள் அறிவுறுத்தின. இதையடுத்து, உ.பி.,யின் கவுதம புத் நகர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கூடுவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் தடை விதிக்கப்பட்டன.
ஹரியானாவில் சாலைப்பணியாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி ஊழியர்களும் தங்களது பணியை புறக்கணித்தனர். இதனால், வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன.
குறைந்த பட்ச ஆதார விலை, பென்சன் , குறைந்தபட்ச சம்பளம் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் 9 சங்கங்களை சேர்ந்த மூத்த தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
டில்லி, பஞ்சாப், ஹரியானா எல்லையில் துணை ராணுவப்படையினர் தங்கள் மீது அத்துமீறுவதாக குற்றம்சாட்டிய விவசாய சங்கத்தினர், நாங்கள் ஒன்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கிடையாது என தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்