இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் பென் ஸ்டோக்ஸுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த இரண்டு வீரர்களும் ஒரு டெஸ்ட் சாதனையை படைக்கும் தருணத்தில் உள்ளனர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்டில் ரன்கள் அடித்து, கேரி சோபர்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் பட்டியலில் சேர உள்ளார். இதுவரை ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அத்துடன் அவர் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை நெருங்கிவிட்டார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் 179 இன்னிங்ஸ்களில் 6251 ரன்கள் எடுத்துள்ளார். இதனுடன் சேர்த்து 197 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். 200 விக்கெட்டுகளை முடிக்க அவருக்கு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இந்த விக்கெட்டுகளை எடுக்கும்பட்சத்தில் ஜாம்பவான்கள் சாதனை பட்டியலில் தன்னுடைய பெயரையும் பென்ஸ்டோக்ஸ் சேர்த்து, ராஜ்கோட் டெஸ்டில் அவரால் சரித்திரம் படைக்க முடியும்.
இதேபோல், இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு சாதனைக்கு மிக நெருக்கமாக உள்ளார். அவர் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைக்க காத்திருக்கிறார். அதற்கு அவருக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவை. அஸ்வின் 97 போட்டிகளில் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த விக்கெட் எடுக்கும்பட்சத்தில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சேர உள்ளார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இதுவரை 3271 ரன்களும் எடுத்துள்ளார்.
அஸ்வினின் சிறந்த டெஸ்ட் ஸ்கோர் 124 ரன்கள். 5 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடித்துள்ளார். இதே டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சதமடித்துள்ளனர். ஜடேஜாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடித்த நான்காவது சதமாகும். அத்துடன் ஆயிரம் ரன்கள் எடுத்து 250 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் இரண்டு இடங்களில் கபில்தேவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.